விமல் பட நடிகை யாஷிகா தற்கொலை வழக்கு: தேடப்பட்டு வந்த காதலன் கைது!
சென்னை: துணை நடிகை யாஷிகா தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அவரது காதலன் மோகன் பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.
விமல் நடித்த மன்னர் வகையறா படத்தில் துணை நடிகையாக நடித்தவர் திருப்பூரைச் சேர்ந்த யாஷிகா(21). அப்படத்தைத் தொடர்ந்து சீரியல்களில் கிடைத்த சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் யாஷிகா. அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் யாஷிகா தற்கொலைக்கு முன்பு தனது தாய்க்கு உருக்கமாக பேசி வாட்ஸ் அப்பில் அனுப்பிய பதிவு கிடைத்தது.
அதன்மூலம், யாஷிகா பெரம்பூரைச் சேர்ந்த மோகன் பாபு என்பவரைக் காதலித்ததும், திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் ஒரே வீட்டில் வசித்ததும் தெரிய வந்தது. மேலும், மோகன்பாபு திருமணம் செய்து கொள்ள மறுத்ததாலேயே யாஷிகா தற்கொலை செய்து கொண்டதும் உறுதியானது.
இது தொடர்பாக யாஷிகாவின் அம்மா வீடியோ ஆதாரத்துடன் போலீசாரிடம் மோகன் பாபு மீது புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மோகன்பாபுவைப் போலீசார் தேடி வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக தற்போது மோகன்பாபு கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், 'யாஷிகா ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டதால், அவரைப் பிரிந்து சென்றதாகவும், அவர் தற்கொலை செய்து கொள்வார் என எதிர்பார்க்கவில்லை' என்றும் மோகன்பாபு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











