Mark Antony - என்னுடைய வெற்றியை அஜித்துக்கு சமர்ப்பிக்கிறேன்.. மார்க் ஆண்டனி ஆதிக் ரவிச்சந்திரன் ஓபன் டாக்
சென்னை: Mark Antony Success Meet (மார்க் ஆண்டனி சக்சஸ் மீட்) மார்க் ஆண்டனி மூலம் கிடைத்திருக்கும் எனக்கான தனிப்பட்ட வெற்றியை அஜித்துக்கு சமர்ப்பிக்கிறேன் என மார்க் ஆண்டனி இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.
ஜிவி பிரகாஷை வைத்து த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் ஆதிக் ரவிச்சந்திரன். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதனையடுத்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கினார். அந்தப் படம் பிரச்னைகளையும் சந்தித்து தோல்வியையும் சந்தித்தது. இதனால் ஆதிக் ரவிச்சந்திரன் விரைவிலேயே காலியாகிவிடுவார் என்று பலரும் ஆரூடம் கூறினர்.

நேர்கொண்ட பார்வை: அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்துக்கு பிறகு எந்த படமும் இயக்காமல் இருந்த ஆதிக் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். ஹெச்.வினோத் இயக்கியிருந்த அந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருப்பார். இந்த சூழலில் அவர் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படத்தை இயக்கியிருக்கிறார்.
நல்ல ரெஸ்பான்ஸ்: ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தின் மூலமும் தோல்வியையே கொடுப்பார் என்ற பேச்சுதான் எழுந்திருந்தது. ஆனால் அப்படி பேசியவர்களுக்கு தன்னுடைய மேக்கிங் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் ஆதிக். டைம் ட்ராவலை மையமாக வைத்து காமெடியுடன் திரைக்கதையை நகர்த்தி அட்டகாசம் செய்திருக்கிறார் படத்தில். அதனை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்திருக்கின்றன.
செம வசூல்: விஷால் பல வருடங்களாக ஒரு ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த சூழலில் மார்க் ஆண்டனி படம் அந்த ஏக்கத்தை தீர்த்து வைத்திருக்கிறது. இதுவரை கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாயை அப்படம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விஷால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். மேலும் இனி ஆதிக் ரவிச்சந்திரனும் பிஸியான இயக்குநராக வலம் வருவார் என்று கணிக்கப்படுகிறது.

சக்சஸ் மீட்: சூழல் இப்படி படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், "என்னுடைய இரண்டாவது படத்தின் தோல்வியிலிருந்து எப்படியாவது மீண்டிட வேண்டும் என்று எப்போதும் நினைப்பேன். இந்தப் படத்தின் மூலம் அது நடந்திருக்கிறது. படத்தின் வெற்றியை எஸ்.ஜே.சூர்யாவுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர் ஒருபோதும் களைத்துபோனதே இல்லை. அர்ப்பணிப்பானவர். அவருக்கு மட்டும் 8 மணி நேரம் கதை சொன்னேன். அப்படியென்றால் அவர் எத்தனை கேள்விகளை கேட்டிருப்பார் என நினைத்து பாருங்கள்.
அஜித்துக்கு சமர்ப்பணம்: இங்கே இருப்பவர்களுக்கு படத்தின் வெற்றியை சமர்ப்பித்துவிட்டேன். எனக்கு இந்தப் படத்தின் மூலம் கிடைத்திருக்கும் தனிப்பட்ட வெற்றியை நான் அஜித்துக்கு சமர்ப்பிக்கிறேன். ஏனென்றால் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தபோது அவரை சந்தித்தேன். அந்த சமயத்தில் உன்னால்முடியும். நீ பெரிய படத்தை இயக்கு என்று நம்பிக்கை கொடுத்தார். அதனால்தான் அவருக்கு சமர்ப்பிக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











