Adipurush - வசூலில் விழுந்த பலத்த அடி.. இறங்கி வந்த ஆதிபுருஷ் படக்குழு.. என்ன காரணம்?
சென்னை: Adipurush (ஆதிபுருஷ்) வசூலில் விழுந்திருக்கும் மிகப்பெரிய அடி காரணமாக ஆதிபுருஷ் படக்குழு டிக்கெட் விலையை ரொம்பவே குறைத்திருக்கிறது.
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருக்கும் படம் ஆதிபுருஷ். சைஃப் அலிகான், கீர்த்தி சனோனி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்தையும், சைஃப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்தையும், கீர்த்தி சனோனி சீதை கதாபாத்திரத்தையும் ஏற்றிருந்தனர். 3டி தொழில்நுட்பத்தில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 16ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது.

படத்தின் டீசரும் ட்ரெய்லரும் வெளியானபோது அதன் கிராஃபிக்ஸ் தரத்தை ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். அதனையடுத்து அதை சரி செய்து படம் வெளியிடப்பட்டது. ஆனால் படத்தை பார்த்த ரசிகர்களோ கிராஃபிக்ஸ் காட்சிகள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். 600 கோடி ரூபாய் பட்ஜெட்டை போட்டு கார்ட்டூன் படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள் என்றும் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.
எதிர்ப்பு: ஒருபக்கம் நெகட்டிவ் விமர்சனம் வலுத்துக்கொண்டிருக்க மறுபக்கம் படத்துக்கு கருத்தியல் ரீதியாக எதிர்ப்புகளும் எழ ஆரம்பித்தன. சீதை எப்படி பாரதத்தின் புதல்வி என கேள்வி கேட்டு படத்தை நேபாளம் தடை செய்திருக்கிறது. அதேபோல் ராமாயணத்தை இழிவுப்படுத்திவிட்டார்கள். எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதத்தையும் எழுதியது. சக்திமான் நாடக நடிகர் முகேஷ் கண்ணாவோ, ஆதிபுருஷ் டீமை எரிக்க வேண்டும் என அனலை கக்கினார்.

வசூலில் அடி: நெகட்டிவ் விமர்சனம், படத்துக்கு எதிர்ப்பு இரு பக்க மத்தளம் போல் படம் அடி வாங்கிக்கொண்டிருக்க வசூலிலும் பலத்த அடி விழுந்தது. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டை கொட்டி எடுக்கப்பட்ட படமோ பத்து நாட்கள் நிறைவடைந்திருக்கும் சூழலில் 500 கோடி ரூபாயைக்கூட நெருங்கவில்லை. மொத்தம் இதுவரை 450 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
படக்குழுவின் ஐடியா: இப்படியே போனால் போட்ட பட்ஜெட்டை எடுப்பதற்குள்ளாகவே திரையரங்குகளில் இருந்து படத்தை தூக்கும் நிலைமை வந்துவிடும். அப்படி நடந்துவிட்டால் அது பெரும் சிக்கலில் முடியும். அந்த ஆபத்தை உணர்ந்துகொண்ட படக்குழு இப்போது ஒரு முடிவை எடுத்திருக்கிறது. அதன்படி ஆதிபுருஷ் படத்தை 112 ரூபாயில் பார்க்கலாம் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இப்படியாவது கூட்டம் திரையரங்குக்கு வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
என்ன காரணம்?: ஆதிபுருஷ் இப்படி பலத்த அடி வாங்கியிருப்பதற்கு படத்தில் உள்ள சில டெக்னிக்கல் பிரச்னைகள் காரணமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் படத்தில் ஏற்பட்டிருக்கும் சில கருத்தியல் பிரச்னைகள் ராமாயணத்தின் ரசிகர்களை ரொம்பவே அப்செட்டாக்கியிருக்கிறது. இதனால்தான் அவர்களிடமிருந்தும் சப்போர்ட் கிடைக்காததால் படம் ரொம்பவே தள்ளாடிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











