துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா நவம்பர் 8ல் ரிலீஸ்
Recommended Video
சென்னை: துருவ் விக்ரம் நடித்துள்ள ஆதித்ய வர்மா திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டதால் நவம்பர் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியாகிய அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு இந்த திரைப்படம் ஹிந்தி மொழியில் கபீர் சிங் என்ற பெயரில் எடுக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த இருமொழி திரைப்படத்தையும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா (Sandeep Reddy Vanga) இயக்கி உள்ளார்.

பின்பு இந்த திரைப்படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் இயக்குனர் பாலா நடிகர் விக்ரமின் மகன் துருவ்வை வைத்து இயக்கி வந்தார். இடையில் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சனைகள் காரணமாக இயக்குனர் பாலா இந்த திரைப்படத்தின் குழுவை விட்டு விலகினார். இதனால் இப்படம் கைவிடப்பட்டுவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
இதனையடுத்து, அர்ஜூன் ரெட்டி பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கிரிசய்யா, இப்படத்தை ஆதித்ய வர்மா என்ற புதுப்பெயருடன் இயக்கி உள்ளார். அது மட்டுமின்றி இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் சிலரை நீக்கிவிட்டு, மீண்டும் முதலில் இருந்து தேர்வு செய்தனர்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக துருவ் விக்ரமும், கதாநாயகியாக பனிதா சந்துவும் (Banita Sandhu) நடிக்கின்றனர். மேலும் ஆகாஷ் பிரேம்குமார், ராஜ், பிரியா ஆனந்த், மெகா சவுத்ரி, ஈஸ்வரி ராவ், கீதாஞ்சலி ராஜமன்னன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் நாயகி பனிதா சந்து, சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான அக்டோபர் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் நிறைவடைந்து திரைக்கு வர தயாராகவுள்ளது. இந்நிலையில் ஆதித்ய வர்மா திரைப்படம் வரும் நவம்பர் 8ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











