டைரக்டராகும் பிருந்தா... காஜலுடன் இன்னொரு ஹீரோயினும் இருக்கிறார்... துல்கருக்கு 2 ஜோடி
சென்னை: நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் படத்தில் காஜல் அகர்வாலுடன் இன்னொரு ஹீரோயினும் நடிக்கிறார்.
நடன இயக்குனர்கள் பலர் டைரக்டர்களாகி உள்ளனர். ராகவா லாரன்ஸ், பிரபுதேவா, ஶ்ரீதர், ரிச்சர்ட், இந்தியில் ஃபரா கான், ரெமோ டிசோசா என்று இந்த வரிசை நீள்கிறது.
இந்த வரிசையில் நடன இயக்குனர் பிருந்தாவும் இணைந்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில், பல்வேறு பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.

துல்கர் சல்மான்
இவர் இயக்கும் படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார். இவர், தமிழில் வாயைமூடி பேசவும், ஓகே கண்மணி, நடிகையர் திலகம் படங்களில் நடித்துள்ளார். இப்போது, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், வான் படங்களில் தமிழில் நடித்து வருகிறார். இதையடுத்து இந்தப் படத்தில் நடிக்கிறார். துல்கர் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

85 வயது பாட்டி
இதை காஜல் அகர்வால் தெரிவித்திருந்தார். மும்பை சாகா என்ற இந்தி படத்தில் நடித்துள்ள காஜல், கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் 85 வயது பாட்டியாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கிடையே, நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார்.

பெரிய பட்ஜெட் படம்
ரொமான்டிக் என்டர்டெயின்மென்ட் கதையான இந்தப் படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. இதில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகக் கூறியிருந்தார் காஜல் அகர்வால். இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. காஜல், தெலுங்கில் பெரிய பட்ஜெட் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

கால்ஷீட் பிரச்னை
அதில் நடிக்க ஆர்வம் காட்டுவதால், இந்த படத்தில் விலகி விட்டதாகக் கூறப்பட்டது. இதனால், காஜல் அகர்வாலுக்கு பதிலாக அதிதி ராவ் ஹைதாரி நடிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. இதுபற்றி படக்குழுவிடம் விசாரித்தபோது, படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்கள். காஜல் அகர்வால் விலகவில்லை. அவரும் இருக்கிறார். இன்னொரு ஹீரோயினுக்காக அதிதியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இன்னும் முடிவாகவில்லை என்று தெரிவித்தனர். அதிதி, தமிழில் காற்றுவெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











