தர்பாரில் ரஜினி பேர் இதுதான்.. ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த ஏ.ஆர்.முருகதாஸ்!
தர்பார் படத்தில் ரஜினியின் கதாபாத்திரப் பெயர் ஆதித்யா அருணாச்சலம் என்பது தெரியவந்துள்ளது.
சென்னை: தர்பார் படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்பது தெரிய வந்துள்ளது.
பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்ட நிலையில், டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு போன்ற வேலைகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்தாண்டு பொங்கலுக்கு படம் ரிலீசாக இருக்கிறது. இப்படம் முருகதாஸ் ஸ்டைலில் செம மாஸ் கமர்சியலாக உருவாகி வருகிறது.

படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே, படத்தில் அவரது பெயர் என்னவாக இருக்கும் என்பது பற்றி பல யூகங்கள் வெளியாயின. ரசிகர்கள் தாங்கள் உருவாக்கிய போஸ்டர்களிலும் தங்களுக்குப் பிடித்தமான முந்தைய ரஜினி பட கதாபாத்திரங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு வந்தனர்.
இந்நிலையில் தர்பார் படத்தில் ரஜினியின் பெயர் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் இதனை முருகதாஸே தெரிவித்துள்ளார். அதன்படி, படத்தில் ரஜினியின் பெயர் ஆதித்யா அருணாச்சலம் ஆகும்.
இதில் ஆதித்யா என்பது முருகதாஸின் மகன் பெயர். அருணாச்சலம் என்பது அவரது அப்பா பெயர். இந்த இரண்டு பேரையும் சேர்த்து அவர் ரஜினி கதாபாத்திரத்திற்கு பேர் வைத்துள்ளதாகத் தெரிகிறது.
அதோடு ஏற்கனவே ரஜினி அருணாச்சலம் படத்திலும் அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. எனவே அந்த ராசி இப்படத்திலும் ஒர்க் அவுட் ஆகுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











