1500 கோடி வசூல் செய்த துரந்தர் 2 திருட்டுக் கதையா?.. புதுசா கிளம்பிய எழுத்தாளர்.. ஆதித்யா தர்?
மும்பை: துரந்தர் முதல் பாகம் வெளியாகி 1300 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. அதன் 2ம் பாகம் கடந்த மாதம் வெளியாகி இதுவரை உலகளவில் 1500 கோடி வசூலை கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது. இந்நிலையில், துரந்தர் 2 திரைப்படம் தன்னுடைய கதை என்றும் இயக்குநர் ஆதித்யா தர் அதனை திருடி படம் எடுத்துள்ளார் என்றும் அதற்கான அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாக சந்தோஷ் குமார் ஆர்.எஸ். என்பவர் பகீர் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
நடிகை யாமி கவுதமின் கணவர் ஆதித்யா தர் தான் பல ஆண்டுகளாக பல ஆராய்ச்சிகளை செய்து இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற உண்மையான தீவிரவாத தாக்குதல்களை அடிப்படையாக வைத்து அதனை சுற்றி புனைவாக உருவாக்கப்பட்ட கதை தான் துரந்தர் என்றார்.

முதல் பாகம் மற்றும் 2ம் பாகம் உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தற்போது திடீரென இப்படியொரு புகார் எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1500 கோடி வசூல்: துரந்தர் திரைப்படம் கடந்த மார்ச் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நேற்று ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் ஆதித்யா தர் தயாரிப்பு நிறுவனம் இணைந்து அதிகாரப்பூர்வமாக உலகளவில் 1501 கோடி வசூலை துரந்தர் 2 ஈட்டியுள்ளதாக அறிவித்தனர். அடுத்தடுத்து வெளியான 2 படங்கள் மூலமாக பாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் 2800 கோடிக்கும் அதிகமாக உச்சத்துக்கு சென்றுள்ளது. இந்நிலையில், இப்படியொரு அதிர்ச்சி சர்ச்சை கிளம்பி உள்ளது.
என் கதையை திருடிட்டாங்க: 'D Saheb' (தாவூத் சாகேப்) என்கிற பெயரில் நான் எழுதி எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ள கதையைத் தான் திருடி ஆதித்யா தர் துரந்தர் 2 படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில், என் நண்பர்கள் சொன்னதைக் கேட்டு அந்த படத்தை பார்த்தால், அப்படியே என்னோட கதை திரையில் ஓடுகிறது. அதை பார்த்த உடனே நெஞ்சம் உடைந்து போய்விட்டேன். இந்த விவகாரத்தை சும்மா விடமாட்டேன் என சந்தோஷ் குமார் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பரபரப்பு குற்றச்சாட்டுக்களை அடுக்கி பாலிவுட்டில் பூகம்பத்தை கிளப்பியுள்ளார்.
ஆதித்யா தர் நோட்டீஸ்: இந்நிலையில், சந்தோஷுக்கு எதிராக துரந்தர் 2 படத்தின் இயக்குநர் ஆதித்யா தர் நோட்டீஸ் அனுப்பியதாக பரபரப்பு கிளம்பியது. ஆனால், இதுதொடர்பாக பாலிவுட் மீடியாக்கள் சந்தோஷிடம் கேட்க, இதுவரை சட்ட ரீதியாக எந்தவொரு நோட்டீஸும் தனக்கு வரவில்லை என்றும் ஆதித்யா தர் தரப்பில் இருந்து மிரட்டல் மெயில் மட்டுமே வந்துள்ளது என்றும் கூறியுள்ளார். ஆதித்யா தர் தரப்பு சந்தோஷ் குமார் குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்ள ரெடியாகி உள்ளதாகவும் அவரது குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











