இட்லிக்கடை தயாரிப்பாளருக்கு எங்கே இருந்து பணம் வருகிறது.. ஜெயக்குமார் கேள்வி!
சென்னை: இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில்
அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று திடீரென ரெய்டு நடத்தியது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கும் நிலையில், அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கிறார்.
சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே, முன்னணி நடிகர்களை வைத்து படத்தை இயக்கும் அளவிக்கு பெரிய தயாரிப்பாளர் என்ற இடத்தை பிடித்தவர் தான் ஆகாஷ் பிரபாகரன். இவர், தனுஷ் தயாரித்து, விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடி தான் என்ற படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி இருந்தார். இதைத் தொடர்ந்த, விகேஷ் சிவன் இயக்கிய 'பாவக் கதைகள்'ஆந்தாலஜியில் குறும்படத்திலும், காத்துவாக்குல இரண்டு காதல் மற்றும் அமரன் படத்திலும் பணியாற்றினார்.
ஆகாஷ் பாஸ்கரன்: பின் டான் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ஆகாஷ் பிரபாகரன், தனுஷ் இயக்கி வரும் 'இட்லி கடை' படத்தை தயாரித்து வருகிறார். இதைத்தொடர்ந்து, சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'பராசக்தி' படத்தையும், அதர்வா முரளி நடித்து வரும் 'இதயம் முரளி' என்கிற படத்தை தயாரிப்பது மட்டுமில்லாமல் இயக்கியும் வருகிறார். இதைத்தொடர்ந்து, சிம்புவின் 49வது திரைப்படத்தையும், அஜித்தை வைத்து தனுஷ் இயக்கும் படத்தையும் இவரே தயாரிக்க இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.\

திடீர் ரெய்டு: இந்நிலையில், இன்று திடீரென அமலாக்கத்துறையினர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சொந்தமான தேனாம்பேட்டை கே.பி.என் தாசன் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிலும், அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலத்தில் உள்ள பிஆர்ஆர் ஸ்வர்ண மாளிகை என்ற நகைகடையின் உரிமையாளர் பாஸ்கரனின் மகன் தான் ஆகாஷ். இவர் பிரபல கவின் கேர் நிறுவனத்தின் நிறுவனர் சி.கே. ரங்கநாதனின் மூன்றாவது மகள் தாரணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த திருமணத்தில் துணை முதல்வர் உதயநிதி, தனுஷ்,சிவகார்த்திகேயன்,சிம்பு, நயன்தாரா, விக்னேஷ் சிவன் என பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
எங்கே இருந்து பணம் வருது: இந்நிலையில், அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் ஆகாஷ் பாஸ்கரன் இருக்கும் ஒரு வீடியோவை வெளிட்டுள்ளார். அதில், வேலைவாய்ப்பு கிடைக்காமல் திண்டாடும் பல லட்சம் இளைஞர்களின் சாபம்! இட்லி கடையில் தொடங்கிய பயணம் பராசக்தி வரை செல்ல எங்கே இருந்து பணம் வந்தது? சினிமாவில் துணை இயக்குநராக கூட தகுதி இல்லாத வரை தயாரிப்பாளராக மாற்றி தமிழ் சினிமாவை விழுங்க நினைப்பது தான் கொள்ளை குடும்பத்தின் செயல் திட்டமா? சிவப்பு சட்டையுடன்-சிரித்த முகத்துடன் நிதியமைச்சரை வரவேற்கும் காட்சி. பட்ஜெட்டிற்கு பணம் போதவில்லை என்றால் ஆகாஷ் பாஸ்கரனிடம் வாங்கி கொள்வார் போல... என பகீரங்கமான குற்றச்சாட்டை வைத்துள்ளார். தற்போது, நடந்து இருக்கும் இந்த ரெய்டால் தனுஷின் இட்லிக்கடை திரைப்படமும், சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் குறித்த நேரத்தில் வெளியாகுமா என்கிற அச்சம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











