Pa Ranjith: தங்கலான் படத்தில் சர்ச்சைக் காட்சி.. பா. ரஞ்சித் மீது பெண் வழக்கறிஞர் புகார்!
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் பொற்கொடி என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தங்கலான் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் அந்த காட்சிகளை உடனே நீக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த பேச்சுகள் தற்போது அதிகரித்து வருகின்றது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தங்கலான். இந்தப் படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் இந்தியிலும் படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

படம் குறித்த விமர்சனங்களில் மிகவும் முக்கியமானது, படம் பேசும் அரசியல்தான். நாகர்கள், பௌத்தம், பூர்வகுடி மக்கள் என கோலார் தங்கவயலை கதைக்களமாகக் கொண்டும், மாய எதார்த்த திரைக்கதையைக் கொண்டும் படத்தினை இயக்கியுள்ளார் பா. ரஞ்சித். இந்த காரணங்களுக்காவே படத்தினை ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். குறிப்பாக விக்ரம் போன்ற உலகம் போற்றும் நடிகரை மிகச் சரியாகப் பயன்படுத்தி அவருக்கும் மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்தது மட்டும் இல்லாமல், தான் கூறவந்த கருத்தையும் தெளிவாகக் கூறியுள்ளார்.
பார்வதி: ஜி.வி. பிரகாஷ்குமாரின் இசை படத்திற்கு பெரிய பலம். குறிப்பாக, தங்கலானுக்காக பல்வேறு பழங்குடி இன மக்களின் இசையை தேடித்தேடி கோர்த்துக் கொடுத்துள்ளார். பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, ட்ரெண்டிங்கில் உள்ளது. படத்தின் மற்றொரு கதாநாயகன், பலம், தூண் என இசையைக் குறிப்பிடலாம். பார்வதியின் நடிப்பு என்பது மெச்சிக்கொண்டே இருக்கலாம் எனும் அளவிற்கு உள்ளது. குறிப்பாக விக்ரம் உடனான ரொமான்ஸ் காட்சியுலும் சரி, முதல் முறையாக ஜாக்கெட் அணியும் காட்சியிலும் சரி, பார்வதியின் முகபாவனைகளுக்காக படத்தினை இன்னொருமுறை பார்க்கலாம் என பலர் கூறி வருகின்றனர்.

புகார்: படம் நல்ல வசூல் செய்து வரும் நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பூந்தமல்லி நீதிமன்ற வழக்கறிஞர் பொற்கொடி என்பவர் இயக்குநர் பா. ரஞ்சித் மீது புகார் அளித்துள்ளார். அதில், தங்கலான் படத்தில் புத்த மதத்தை உயர்வாகக் காட்ட வைணவ மதத்தை இழிவு படுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாகவும், அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்தக் காட்சிகளை நீக்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்குச் சென்று, படத்திற்கு தடைவிதிக்க கோரி வழக்கு தொடுப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். சர்ச்சைக்குரிய காட்சிகள் பலரது மனதை புண்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த படம்: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்தப் படத்திற்கு ஜெர்மன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை தங்கலான் படத்தினைத் தயாரித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று அதாவது ஆகஸ்ட் 21ஆம் தேதி சென்னையில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார்.

ஸ்டூடியோ க்ரீன்: இந்த பூஜையின்போது படத்தின் போஸ்டரும் இடம் பெற்றுள்ளது. அதில் வானத்தில் இருந்து போர் விமானத்தில் இருந்து, பாராசூட் மூலம் ஒருவர் குதிப்பதைப் போல் இருக்கின்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. பா. ரஞ்சித் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள தங்கலான் படத்தினையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்தது. அதே நிறுவனம்தான் தற்போது ஜெர்மன் படத்தையும் தயாரிக்கின்றது.


Click it and Unblock the Notifications











