நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா ஏலே? திடீர் சிக்கலால் குழப்பத்தில் படக்குழு!
சென்னை: ஏலே படம் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு தமிழில் வெளியான சில்லுக்கருப்பட்டி படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 4 கதைகளை கொண்ட ஆந்தாலஜி படமாக இந்த படம் உருவானது.
இந்நிலையில் இந்த படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம், தனது அடுத்த படமாக ஏலே படத்தை இயக்கியுள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமை
இந்தப் படத்தை புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரித்துள்ளனர். இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தியேட்டர்கள் மறுப்பு
மேலும் ஓடிடி தளத்தில் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 27 ஆம் தேதியே படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று அறிந்த திரையரங்கு உரிமையாளர்கள் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

நீக்கப்பட்ட மாஸ்டர்
மாஸ்டர் படம் திரையரங்கில் ரிலீஸ் ஆன கையோடு ஓடிடி தளத்தில் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திரையரங்க உரிமையாளர்கள் உடனடியாக படத்தை திரையரங்குகளில் இருந்து நீக்கினர்.

தீர்மானங்கள்
இதனை தொடர்ந்து அண்மையில் திரையரங்க உரிமையாளர்களின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பெரிய பட்ஜெட் படங்கள் தியேட்டரில் வெளியாகி 50 நாட்கள் கழித்தும், சின்ன பட்ஜெட் படங்கள் 30 நாட்கள் கழித்தும் ஓடிடியில் வெளியாகும் என்னும் உத்தரவாதக் கடிதத்தை படத்தின் தயாரிப்பாளர்கள் அளித்தால் மட்டுமே அந்தப் படங்களைத் திரையிட முடியும் தீர்மானம் நிறைவேற்றினர்.

படக்குழு திட்டமிட்டுள்ளது
இந்நிலையில் ஏலே படத்தை 27ஆம் தேதி ஓடிடியில் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதால், படக்குழுவால், திரையரங்க உரிமையாளர்களின் தீர்மானத்திற்கு ஏற்ப உத்தரவாதம் அளிக்க முடியவில்லை என தெரிகிறது. இதனால் அறிவித்தப்படி வரும் 12ஆம் தேதி திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் நேரடியாக ஓடிடி தளத்திலேயே படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











