கர்ப்பிணி பெண்ணை பலாத்காரம் செய்யும் காட்சி முதல் 24 காட்சிகள் நீக்கம்.. குறைந்து போன எம்புரான் வசூல்!
சென்னை: 2002ம் ஆண்டு நடைபெற்ற நரோடா பாட்டியா படுகொலையை மையமாக வைத்து பிருத்விராஜ் சுகுமாரன் எல் 2 எம்புரான் படத்தின் ஆரம்ப காட்சியை உருவாக்கினார் என குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்ட நிலையில், இந்து மதத்துக்கு எதிரான காட்சிகள் அதிகம் உள்ளதாகவும் மதவாத சண்டையை இந்த படம் ஊக்குவிக்கும் என்று சொல்லி தணிக்கை செய்து கடந்த மார்ச் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியான எம்புரான் திரைப்படம் மீண்டும் மறு தணிக்கை செய்யப்பட்டு 24 காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.
மலையாள திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய பொருட்செலவில் வெளியான எல் 2 எம்புரான் திரைப்படம் அதிரடியாக மார்ச் 31ம் தேதி வரை 200 கோடி பாக்ஸ் ஆபீஸை கடந்து சாதனை படைத்தது. திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை அன்றும் இந்த படம் சல்மான் கானின் சிக்கந்தர் படத்தை விட அதிக வசூல் வேட்டை நடத்தியது.
ஆனால், மறு தணிக்கைக்கு பிறகு எம்புரான் திரைப்படத்தின் வசூல் அதிரடியாக செவ்வாய்க்கிழமையான நேற்று குறைந்து போனது படக்குழுவை மேலும், சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

200 கோடி வசூல்: மலையாள திரையுலகில் கடந்த ஆண்டு சிதம்பரம் இயக்கத்தில் குணா குகையை மையமாக வைத்து வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தான் முதன்முதலில் 200 கோடி கிளப்பில் இணைந்த படம். அந்த படம் அதிகபட்சமாக 242.3 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அந்த படத்தைத் தொடர்ந்து எம்புரான் திரைப்படமும் 200 கோடி பாக்ஸ் ஆபீஸ் கிளப்பில் இணைந்துள்ளது. தடைகளை உடைத்து வரலாற்று சாதனை செய்துள்ளான் எம்புரான் என மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்திலேயே அதிகாரப்பூர்வமாக பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்து பதிவிட்டுள்ளார்.
24 சீன்ஸ் கட்: எம்புரான் படத்தின் தொடக்கத்தில் வில்லன் பால்ராஜ் இஸ்லாமிய குடும்பத்தை கூண்டோடு அழிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இன்னொரு வில்லன் கர்ப்பிணிப் பெண் என்று கூட பாராமல் அந்த பெண்ணை பலாத்காரம் செய்யும் காட்சிகளையும் பிருத்விராஜ் சுகுமாரன் படமாக்கியிருந்தார். ஏற்கனவே மார்கோ படத்தில் கர்ப்பிணிப் பெண் வயிற்றில் இருந்து சிசுவை வெளியே எடுப்பது போன்ற கொடூரமான காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், மத பிரச்னையை தூண்டும் விதமாக படத்தின் பல காட்சிகள் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. அதன் பின்னர், 24 காட்சிகளை படத்தில் இருந்து நீக்கியுள்ளனர். முதன்முறையாக சென்சார் செய்யும் போது அதிகாரிகள் என்ன செய்தார்கள் என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். அரசியல் அழுத்தம் காரணமாக ஒட்டுமொத்த படமே சீர் குலைந்துவிட்டது என்கிற விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இதற்கு முன்பு ஜீவாவின் ஜிப்ஸி படத்திற்கும் இதே நிலைமை உருவானது குறிப்பிடத்தக்கது என்கின்றனர்.
குறைந்த வசூல்: செவ்வாய்க்கிழமையான நேற்று ட்ரிம் செய்யப்பட்ட வெர்ஷனை பார்த்த ரசிகர்களுக்கு பெரிதாக படம் கனெக்ட் ஆகவில்லை. பஜ்ரங்கி என வில்லனுக்கு வைக்கப்பட்ட பெயரையும் பால்தேவ் என மாற்றியுள்ளனர். இந்நிலையில், 6ம் நாளான நேற்று ஒட்டுமொத்தமாக இந்தியளவில் 7.8 கோடி ரூபாய் மட்டுமே எம்புரான் வசூல் செய்ததாக Sacknilk இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது. உலகளவில் எம்புரான் வசூல் 220 கோடி வரை வந்திருக்கும் என்கின்றனர். இந்த வார முடிவில் 300 கோடி வரை அதிகபட்சமாக வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











