முக்காலா முக்காப்புல்லா.. அட செம காம்போ.. 25 ஆண்டுகளுக்கு பின் இணையும் நடனப்புயல் - இசைப்புயல்
சென்னை: பிரபுதேவா இந்தியாவில் புகழ் பெற்ற நடன அமைப்பாளர்களில் ஒருவர். அதுமட்டுமின்றி பல படங்களில் ஹீரோவாக நடித்து அப்ளாஸை அள்ளிய அவர் வெற்றிகரமான இயக்குநர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். அவர் தமிழில் இயக்கிய போக்கிரி திரைப்படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. தற்போது விஜய்யுடன் GOAT படத்தில் நடித்துவருகிறார் பிரபுதேவா. இந்தச் சூழலில் மீண்டும் நடிப்பில் பிஸியாகியிருக்கும் அவர் மனோஜ் என்.எஸ்.இயக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
இந்தியாவின் சிறந்த நடன அமைப்பாளர் பிரபுதேவாவின் கோரியோகிராஃபியில் அனைத்து நடிகர்களுமே சிறப்பான நடனத்தை வெளிப்படுத்துவார்கள். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைத்தார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மீனா; இருப்பதிலேயே ரொம்பவும் கடினமான கோரியகிராஃபர் என்றால் அது பிரபுதேவாதான் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. நடன அமைப்பாளராக மட்டுமின்றி பிரபுதேவா நடிகராகவும் புகழ் பெற்றவர். காதலன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரபுதேவா தொடர்ந்து ராசைய்யா, விஐபி, மின்சாரக்கனவு, டைம் என ஏராளமான படங்கள் நடித்தார்.

காதல் கொண்டேன்: அந்தப் படங்களும் ஹிட்டாகின. இதனால் 90களில் முன்னணி நடிகர்கள் வரிசையில் பிரபுதேவா இருந்தார். மேலும் காதல் கொண்டேன் படத்துக்கு ஹீரோவாக நடிக்க முதலில் செல்வராகவன் பிரபுதேவாவைத்தான் அணுகினார் என்பது நினைவுக்கூரத்தக்கது. பிரபுதேவா கடைசியாக பகீரா படத்தில் நடித்திருந்தார். படம் படுதோல்வியை சந்தித்தது.
டைரக்டர் பிரபுதேவா: நடிகர், நடன அமைப்பாளராக கலக்கிவந்த பிரபுதேவா 2005ஆம் ஆண்டு இயக்குநராகவும் அறிமுகமானார். அவர் தெலுங்கில் இயக்கிய முதல் படம்தான் தமிழில் சம்திங் சம்திங் படமாக ரீமேக்காகியது. அதனையடுத்து தமிழில் போக்கிரி, வில்லு, வெடி, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் ஹிந்தியில் வாண்டட் (போக்கிரி ரீமேக்), ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா, தபாங் 3 உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.
சர்ச்சைகள்: பிரபுதேவாவை சுற்றி சர்ச்சைகளும் வட்டமடித்தன. தன்னுடன் நடனம் ஆடிய ரமலத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதற்கிடையே நயன்தாராவை காதலித்தார். பிரபுதேவாவுக்காக நயன் மதம் மாறவும் செய்தார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை இருவரின் காதலும் பிரேக் அப்பில் முடிந்தது. இதனையடுத்து அவர் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் பெண் குழந்தை பிறந்தாள்.
புதிய படம்: இந்நிலையில் பிரபுதேவா நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி மனோஜ் என்.எஸ்.இயக்க பிரபுதேவாவுடன் யோகிபாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோரும் நடிக்க கமிட்டாகியிருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
ஆறாவது முறையாக கூட்டணி: ஏற்கனவே பிரபுதேவா நடித்த காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ,மின்சார கனவு உள்ளிட்ட 5 படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்போது ஆறாவது முறையாக இருவரும் இணைந்திருக்கிறார்கள். படத்தின் அறிவிப்பு போஸ்டரில் முக்காலா முக்காபுல்லா பாடலில் இடம்பெற்ற தலை, கைகள், கால்கள் இல்லாத பிரபுதேவாவின் போஸ்டர் இடம்பெற்றிருக்கிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ஒருவேளை நடனம் சம்பந்தப்பட்ட படமாக இது இருக்குமோ என்று கேள்வி எழுப்பிவருகின்றனர். அதுமட்டுமின்றி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரபுதேவா நடனத்தில் பின்னி எடுத்துடுவாரே என்று மகிழ்ச்சியோடு கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
GOAT: முன்னதாக பிரபுதேவா தற்போது விஜய்யுடன் GOAT படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருக்கு முக்கியமான ரோல் என கூறப்படுகிறது. இந்தப் படம் தவிர்த்து மலையாளத்தில் அனுஷ்காவுடன் நடிப்பதற்கும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். பிரபுதேவாவின் நடனத்துக்கு எப்படி ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோல் அவரது நடிப்புக்கும் ஏகப்பட்ட பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். ஆனால் சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதாக பிரபுதேவா அறிவித்தவுடன் சோகமடைந்த ரசிகர்கள் இப்போது நடிப்பில் தொடர்ந்து கமிட்டாகிவருவதை பார்த்து சந்தோஷம் அடைந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











