விக்ரமை தேடி தேடி பார்க்கும் ரசிகர்கள்...36 வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு வரவேற்பா?
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படம் பற்றிய தகவல்கள் பலவும் வெளிவந்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்து, படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டி வருகின்றன.
சர்வதேச அளவில் படத்திற்கு ப்ரொமோஷன் நடந்து வருகிறது. பிரான்ஸ் கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்ரம் டிரைலரை திரையிட்டார்கள். இப்போது மலோசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று ப்ரொமோஷன் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். இந்த படம் நிச்சயம் வேற லெவலில் ஹிட் ஆகும் என அனைவரும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

36 ஆண்டுகளுக்கு பின் வரவேற்பு
லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள விக்ரம் படத்தை பார்க்க எந்த அளவிற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்களோ, அதை அளவு கமல் நடித்த பழைய விக்ரம் படத்தையும் பார்க்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 1986 ம் ஆண்டு கமல், அம்பிகா, லிசி, சத்யராஜ், சாருஹாசன், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பலர் நடித்து, மே 29 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தை ராஜசேகர் என்பவர் இயக்கி இருந்தார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருந்தது. சுதாஜா வசனம் எழுதி இருந்தார்.

அப்போ விமர்சனம், இப்போ வரவேற்பு
இளையராஜா இசையில் விக்ரம் படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அதே சமயம் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. 36 வருடங்களுக்கு முன்பே 12 கோடி செலவழித்து எடுக்கப்பட்ட இந்த படம் 100 நாட்கள் ஓடியும், நஷ்டத்தையே சந்தித்தது. கம்ப்யூட்டர், ராக்கெட் தொழில்நுட்பம் பற்றி மக்கள் பெரிய அளவில் அறியாத காலத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் அந்த கால கட்டத்தில் விமர்சனங்களையே சந்தித்தது. என்ன கமல் இப்படி ஒரு புரியாத படத்தை எடுத்திருக்கிறார் என்றே பலரும் கூறினர்.

ஆர்வம் காட்டும் ரசிகர்கள்
விக்ரம் படத்தின் பாடல்களை ரசித்த அளவிற்கு கூட அந்த படத்தை ரசிகர்கள் பெரிதாக ரசிக்கவில்லை. ஆனால் விக்ரம் படம் ரிலீசாகி 36 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆயிரத்தில் ஒருவன், கர்ணன், அடிமைப் பெண் போன்ற பழைய படங்கள் கூட டிஜிட்டலுக்கு மாற்றியும், ரீ ரிலீஸ் செய்யப்பட்டும் விட்டன. ஆனால் விக்ரம் போன்ற படங்கள் பழைய பிரிண்டிலேயே தற்போது வரை உள்ளது.

நல்ல பிரிண்ட் கிடைக்குமா
இதனால் விக்ரம் படத்தின் தெளிவான பிரிண்ட் கிடைக்குமா, அப்படி இருந்தால் யாராவது இணையத்தில் பதிவேற்றம் செய்யுங்கள் என சோஷியல் மீடியாவில் பலரும் கேட்டு வருகின்றனர். பழைய விக்ரம் படம் பற்றிய பல தகவல்கள், ஸ்டில்கள் என பலவற்றையும் ரசிகர்கள் பலர் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். விக்ரம் படம் ஓடிடி.,யில் இருக்கா என்று கூட பலர் கேட்டு வருகின்றனர்.

ஆரம்பிச்சு வச்சது கமல் தானா
36 வருடங்களுக்கு முன் கமல் தனது படத்தில் பயன்படுத்திய தொழில்நுட்பத்தையும், தொலை நோக்கு பார்வையுடன் உருவாக்கியதையும் ரசிகர்கள் தற்போது வியந்து பாராட்டி வருகின்றனர். தற்போது சினிமாவில் பயன்படுத்தப்படும் நகரும் தன்மை கொண்ட கேமிராக்கள் முதன் முதலில் விக்ரம் படத்தில் தான் பயன்படுத்தப்பட்டது. இத்தனை ஆண்டுகள் கழித்து விக்ரம் படத்திற்கு திடீரென மவுசு கூடி உள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











