தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்..கேப்டனுக்கா இந்த நிலை? கண்கலங்கிய ரசிகர்கள்!
சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் தனது 71வது பிறந்த நாளான இன்று, கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு, கடந்த 2014ம் ஆண்டு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் எடுத்த பின்னரும், அவரது உடல் நிலை மோசமாகிக்கொண்டே சென்றதால், பிரேமலதா மற்றும் மகன்களுடன் சிங்கப்பூர், மலேசியா, லண்டன் சென்று சிகிச்சை அளித்தனர்.

நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்தார்: இதில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும், அவரது உடல் நலன் கருத்திக் கொண்டு எந்த ரசிகர்களையும், தொண்டர்களையும் அண்மைக்காலமாக சந்திக்கவில்லை. தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாலும், தனது பிறந்த நாளில் விஜயகாந்த், தன்னுடைய ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்க விரும்பியதாலும் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலத்தில் காலை 10.30 கட்சி அலுவலகம் வந்த அவர், 11 மணியளவில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார்.

ஆரவாரம் செய்த தொண்டர்கள்: எப்போது கேப்டனை பார்ப்போம் என ஏங்கி கிடைத்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் கண்குளிர விஜயகாந்தை நீண்ட நாட்களுக்கு பின் பார்த்த மகிழ்ச்சியில் அமர்ந்த இடத்தில் இருந்தபடியே, கைகளை தூக்கி கேப்டன்... கேப்டன்... என ஆரவாரம் செய்தனர். கேப்டன் என கோஷங்கள் எழுப்பியபோது மிகவும் உற்சாக மடைந்த விஜயகாந்த் இரண்டு கைகளையும் உயர்த்தி ரசிகர்களையும் உற்சாகப்படுத்தினார்.

கேப்டனுக்கா இந்த நிலைமை: அனைவருக்கும் வாரி வாரி கொடுத்த விஜயகாந்த் எலும்பும் தோலுமாக இருப்பதைப்பார்த்த ரசிகர்கள் கேப்டனுக்கா இந்த நிலைமை என கண்ணீருடன், கேப்டன் வாழ்க என்று கோஷம் எழுப்பினர். ரசிகர்கள் மற்றும் தொண்டர்களால் கோயம்பேடு தேமுதிக அலுவலகமே திணறியது.

வதந்தியை நம்ப வேண்டாம்: அப்போது மேடையில் பேசிய பிரேமலதா, கேப்டனின் உடல்நிலை குறித்து ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. தொண்டர்கள் யாரும் அதை நம்ப வேண்டாம். நமது தலைவர் நூறாண்டு காலம் வாழ்வார் என்று அந்த விழாவில் பிரேமலதா பேசினார். இரண்டு நாட்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











