அக்ஷய் குமாரைத் தொடர்ந்து, 'ராம் சேது' படக்குழுவில் 45 பேருக்கு கொரோனா
மும்பை : பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாருக்கு நேற்று காலை கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த அக்ஷய், பிறகு மருத்துவர்கள் ஆலோசனைப்படி நேற்று மாலையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அக்ஷய் குமார் தற்போது ராம் சேது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மத்திய மும்பை உள்ளிட்ட மும்பையின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வந்தது. படப்பிடிப்பின் போது சில சமயங்களில் ஒரே நேரத்தில் 300 பேர் வரை ஒரே இடத்தில் இருக்க வாய்ப்புள்ளது.

படப்பிடிப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மகாராஷ்டிரா முழுவதும் கொரோனா பரவி வருவதால், கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் பல சமயங்களில் குறைவானவர்களை வைத்தே படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்துள்ளது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அக்ஷய் குமாரின் சொந்த தயாரிப்பு
அக்ஷய் குமாரின் கேப்பே குட் ஃபிலிம்ஸ் மற்றும் விக்ரம் மல்கோத்ராவின் அபுதண்டியா என்டர்டைன்மென்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தான் இந்த படத்தை தயாரித்து வருகின்றன. இந்த படத்தில் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், நஸ்ரத் பருச்சா ஆகியோரும் நடிக்கின்றனர்.

அக்ஷய் குமாருக்கு கொரோனா
இந்நிலையில் அக்ஷய் குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், செட்டில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மும்பையில் உள்ள மது தீவு பகுதியில் நடந்த படப்பிடிப்பின் போது 100 பேர் வரை பங்கேற்றதாக கூறப்படுகிறது.

அனைவருக்கும் கொரோனா பரிசோதனை
இவர்கள் அனைவருக்கும் நடத்தப்பட்ட முதல்கட்ட பரிசோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை என வந்துள்ளது. ஆனால் அக்ஷய் குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அட்வான்ஸ் முறை பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் படக்குழுவில் இருந்த 100 பேரில் 45 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

45 பேருக்கு கொரோனா உறுதியானது
கொரோனா உறுதி செய்யப்பட்ட 45 பேரும் ஜூனியர் ஆர்டிஸ்ட்கள். இதனால் சூட்டிங் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. குறைந்தது 13 முதல் 14 நாட்களுக்கு சூட்டிங் நடத்தப்படாது என்றே படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications











