சூர்யாவின் லைன் அப்பில் இணைந்த அந்த இயக்குநர்?.. ஏற்கனவே தோல்வி.. இந்த முறை வெல்லுமா கூட்டணி?
சென்னை: சூர்யா நடிப்பில் கடந்த வருடம் வெளியான ரெட்ரோ தோல்வி படமாக அமைந்துவிட்டது. அதற்கும் முன்னதாக ரிலீஸான கங்குவாவும் பயங்கர அடி வாங்கியது. கண்டிப்பாக ஒரு ஹிட் தேவைப்படும் சூழலில்; ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் அந்தப் படம் வெளியாகவிருக்கிறது. மேலும் வெங்கி அட்லூரி மற்றும் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கும் அவர்; ஹிட் பட இயக்குநருடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாகவே கரியர் சரியில்லை. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஆர்வத்தோடு நடித்த கங்குவா படுதோல்வியை சந்தித்தது. அந்தப் படம்தான் தோல்வியடைந்துவிட்டது; கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த ரெட்ரோ படம் ஹிட்டாகும் என நினைத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் படமும் தோல்வியைத்தான் சந்தித்தது. வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவிருந்த வாடிவாசல் படமும் ட்ராப்பாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆர்.ஜே.பாலாஜியுடன் கருப்பு: இப்படிப்பட்ட சூழலில்தான் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடிக்க கமிட்டானார். அதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். முதன்முறையாக பாலாஜியும், சூர்யாவும் சேர்ந்திருப்பதால் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. மேலும் எப்போது ரிலீஸாகும் என கேள்வியும் எழுந்துள்ளது. சமீபத்தில் வீடியோ வெளியிட்டிருந்த பாலாஜி, அடுத்த அப்ப்டேட் படத்தின் ரிலீஸ் தேதியுடன்தான் வரும் என்று கூறியிருக்கிறார்.

வெற்றி இயக்குநர்களுடன்: கருப்பு படத்தை முடித்துவிட்டு இப்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46ஆவது படத்தில் நடித்துவருகிறார். இதன் ஷூட்டிங் சமீபத்தில்தான் தொடங்கியது. துல்கர் சல்மானை வைத்து லக்கி பாஸ்கர் என்ற மெகா ப்ளாக் பஸ்டர் கொடுத்தவர் வெங்கி. எனவே சூர்யாவுக்கும் தரமான ஹிட்டை கொடுப்பார் என ரசிகர்கள் நம்புகிறார்கள். இதனை முடித்துவிட்டு ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47ஆவது படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். இதன் மீதும் அதீத நம்பிக்கை இருக்கிறது.
புதிய தகவல்: இந்நிலையில் சூர்யாவின் லைன் அப் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போது ஊர்வசி - ஜெயராமை வைத்து பாண்டிராஜ் ஒரு படத்தை இயக்கிவருகிறாராம். அதை முடித்துவிட்டு விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் பணியாற்றிவிட்டு சூர்யாவை வைத்து படம் இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது. இது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை.
இம்முறை வெற்றி பெறுமா?: ஏற்கனவே சூர்யாவை வைத்து பசங்க 2, எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ். அவற்றில் பசங்க 2வில் சூர்யா கெஸ்ட் ரோல் செய்திருந்தார். அந்தப் படமும் சரி, எதற்கும் துணிந்தவன் படமும் சரி தோல்வியைத்தான் சந்தித்தன. ஒருவேளை மீண்டும் அவர்கள் இணைந்தால்; இந்த முறையாவது அந்தக் கூட்டணி வெற்றியடையுமா என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











