Prabhas: அடுத்தடுத்த ப்ளாப் படங்கள்.. பிரபாசுக்கு கைக்கொடுக்குமா சலார்.. ப்ராஜெக்ட் கே?
ஐதராபாத்: நடிகர் பிரபாசிற்கு பாகுபலி, பாகுபலி 2 படங்கள் சிறப்பாக கைக்கொடுத்தன. ராஜமௌலி இயக்கத்தில் வரலாற்றுப் பின்னணியில் இந்தப்படங்கள் வெளியாகின.
இந்தப் படங்களை தொடர்ந்து பிரபாஸ் தெலுங்கின் முன்னணி ஹீரோவாக மாறினார். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு அமைந்தன.
தற்போது பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இந்திய அளவில் கவனம் பெற்றுள்ள ப்ராஜெக்ட் கே என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
அடுத்தடுத்த பிளாப் படங்களால் பிரபாஸ் ரசிகர்கள் ஏமாற்றம்: நடிகர் பிரபாஸ் அடுத்தடுத்த தெலுங்குப் படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டில் வெளியான வர்ஷம் சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது. தொடர்ந்து மிர்ச்சி, முன்னா மிஸ்டர் பர்பெக்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தாலும் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களே சர்வதேச அளவில் பிரபாசை ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது.

பாகுபலி படங்களின் வெற்றி, பிரபாசிற்கு ஏராளமான படவாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளது. தற்போது பிரபாஸ் நடிப்பில் மிகுந்த பொருட்செலவில் ஆதிபுருஷ் படம் ரிலீசாகியுள்ளது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. ஆனாலும் படத்திற்கு சில இடங்களில் சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது. பலர் புக் செய்த தங்களது டிக்கெட்டுகளை கேன்சல் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக பாகுபலி படத்தை தொடர்ந்து சாஹா என்ற படத்தில் நடித்திருந்தார் பிரபாஸ். இந்தப் படம் ரிலீசாகி மிகப்பெரிய ப்ளாப் படமானது. இந்தப் படத்தை ரசிகர்கள் மிகவும் அதிகமாக எதிர்பார்த்த நிலையில், படம் அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. அடுத்தப்படத்தையாவது வெற்றிப்படமாக பிரபாஸ் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்ததாக வெளியான ராதே ஷ்யாம் படமும் சொதப்பியது.
இந்நிலையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி நேற்றைய தினம் சர்வதேச அளவில் வெளியாகியுள்ள படம் ஆதிபுருஷ். இந்தப் படத்திற்கும் அதிகமாக எதிர்பார்ப்பு இருந்த நிலையில், முன்னதாக தூர்தர்ஷனில் வெளியான ராமாயணம் சீரியல் கொடுத்த உணர்வுப்பூர்வமான தொடர்பைகூட இந்தப் படம் ரசிகர்களிடையே ஏற்படுத்த தவறியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. படம் மிகவும் மோசமான கமெண்ட்களை ரசிகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் பெற்று வருகிறது.
பாகுபலி 2 படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹா, ராதே ஷ்யாம் மற்றும் ஆதி புருஷ் என அடுத்தடுத்த சொதப்பல் படங்களை கொடுத்து ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளார் பிரபாஸ். தற்போது கேஜிஎப் படங்களை இயக்கிய பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்துள்ளார். விரைவில் ரிலீசாகவுள்ள இந்தப் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து பான் இந்தியா படமாக உருவாகிவரும் ப்ராஜெக்ட் கே படத்திலும் நடித்து வருகிறார் பிரபாஸ். இந்தப் படத்திற்கும் அதிகமான எதிர்பார்ப்பு உள்ளது. படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் அவருடன் இணைந்து நடித்து வருகின்றனர். பிரபாசிற்கு கமல் வில்லனாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சலார், பிராஜெக்ட் கே படங்கள் கைக்கொடுத்தால்தான் வீழ்ந்த தன்னுடைய மார்க்கெட்டை மீண்டும் பிரபாஸ் மீட்டெடுக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











