கூலி கொடுத்த அடியிலிருந்து எழுந்த லோகேஷ் கனகராஜ்.. அடுத்த பட அறிவிப்பு வந்தது.. இதுவாவது ஹிட்டாகுமா?
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான படம் கூலி. ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மிகப்பெரிய் ஹைப்பை பெற்ற படம் படுதோல்வியை சந்தித்தது. முக்கியமாக லோகேஷ் கனகராஜின் கரியரையே அந்தத் தோல்வி அசைத்து பார்த்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில் அடுத்ததாக அவர் இயக்கவிருக்கும் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது.
கோவையை சேர்ந்த லோகேஷ் கனகராஜ் யாரிடமும் உதவி இயக்குநராககூட பணியாற்றாமல் இயக்குநராக மாறியவர். முதல் படமாக அவர் இயக்கிய மாநகரம், இரண்டாவது படமாக இயக்கிய கைதி ஆகிய படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. அந்த இரண்டு படங்களின் வெற்றி பெரிய ஹீரோக்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புகளை அவருக்கு உருவாக்கிக்கொடுத்தது. அதன்படி விஜய், கமல்ஹாசன் ஆகியோருடன் பணியாற்றினார்.
சறுக்கிய லோகேஷ்: அப்படி அவர் விஜய்யை வைத்து இயக்கிய மாஸ்டர் சூப்பர் ஹிட்டாக; கமலை வைத்து இயக்கிய விக்ரம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. தொடர்ந்து மீண்டும் விஜய்யை வைத்து லியோவை இயக்கினார். ஆனால் அப்படம் கொஞ்சம் சறுக்கியது. அதிலும் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக ட்ரோல் மெட்டீரியல் ஆகின. உடனடியாக தனது தவறை திருத்திக்கொள்ளவில்லை என்றால் அவர் ஃபீல்டில் நிலைப்பது கஷ்டம் என்ற பேச்சு எழுந்தது.

மொத்தமாய் முடிந்த லோகேஷ்: இப்படிப்பட்ட சூழலில்தான் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கினார். கண்டிப்பாக கமலுக்கு எப்படி மெகா ஹிட்டை கொடுத்தாரோ அதேபோல்தான் ரஜினிக்கும் கொடுப்பார் என்று நம்பிக்கை இருந்தது. பற்றாக்குறைக்கு நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், சத்யராஜ், உபேந்திரா, அமீர் கான், ஸ்ருதிஹாசன் என பெரிய நட்சத்திர பட்டாளத்தையே அப்படத்தில் நடிக்க வைத்திருந்தார் லோகி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.
படம் படுதோல்வி: ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் பார்க்க சென்றார்கள். ஆனால் துளிக்கூட அவர்களை படம் திருப்திப்படுத்தவில்லை. பழைய கதையை பட்டி டிங்கரிங் பார்த்து ரசிகர்களின் தலையில் கட்டிவிட்டார் என வெளுத்தார்கள் ரசிகர்கள். இத்தனை கோடி ரூபாய் பட்ஜெட், இவ்வளவு பெரிய நட்சத்திரங்களை மட்டும் வைத்து ஒப்பேத்திவிடலாம் என அவர் நினைத்துவிட்டாரோ என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. அவரும் தனது தோல்வியை ஏற்றுக்கொண்டார் என்றே சொல்லவேண்டும்.
அடுத்த படம்: கூலி கொடுத்த அடிக்கு பிறகு அவர் அடுத்த படமாக எதை இயக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது. அதன்படி அவர் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார். வழக்கம்போல் அனிருத் இசையமைக்கிறார். இந்த வருடத்தில் ஷூட்டிங் ஆரம்பித்து; அநேகமாக இவ்வருட இறுதியிலேயே படம் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. கூலி கொடுத்த அடிக்கு இதில் மருந்திட்டுக்கொள்வாரா லோகேஷ்; பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











