ஜனநாயகன் சென்சார் பிரச்னை தீருமா?.. ரிலீஸ் தேதியை முடிவு செய்த படக்குழு?
சென்னை: ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் கேவிஎன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் என தெரிவித்திருந்தது. அதன்படி இன்று வழங்கிய தீர்ப்பில் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருக்கிறது. இதனால் படத்துக்கு ஏற்பட்ட பிரச்னை தீர்ந்துவிட்டது. எனவே புதிய ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படம் ஒன்பதாம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. அதற்கான அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்த சூழலில்; சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்கவில்லை. முதலில் சான்றிதழ் கிடைக்காததால்; அவர்கள் சொன்ன மாற்றங்களை செய்து மறு ஆய்வு கமிட்டிக்கு அனுப்பியது. அப்போதும் அதிகாரிகளுக்கு சர்ட்டிஃபிக்கேட்டை தருவதற்கு மனம் வரவில்லை.

நீதிமன்றம் சென்ற கேவிஎன்: இனிமேலும் விட்டால் வேலைக்கு ஆகாது என்பதை முடிவு செய்து கடந்த ஆறாம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தயாரிப்பு நிறுவனமான கேவிஎன். அதனை அவசர வழக்காக எடுத்து விசாரித்த நீதிபதி ஏழாம் தேதிக்கு தள்ளி வைத்தார். இதனையடுத்து நேற்று முன்தினம் வழக்கை விசாரித்தார் நீதிபதி. அப்போது, 'படத்தில் ஆபத்தான காட்சிகள் இருக்கின்றன. தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் மறு ஆய்வுக்கு அனுப்ப பரிந்துரைத்துள்ளோம்' என தணிக்கை குழு சார்பில் வாதிடப்பட்டது.
இன்று தீர்ப்பு: கேவிஎன் தரப்பும் தனது வாதத்தை வலுவாக முன்வைத்தது. இரண்டுதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கப்படும் என கூறியிருந்தார். அதன்படி இன்று வழங்கிய தீர்ப்பில், 'ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக இன்றே யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி மறு தணிக்கைக்கு செல்ல வேண்டும் என்ற உத்தரவையும் அதிரடியாக ரத்து செய்தார். இதன் காரணமாக படக்குழு நிம்மதியடைந்திருக்கிறது.
மேல்முறையீடு: சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து தணிக்கை குழு வாரியம் மேல்முறையீடு செய்யவும் முடிவு செய்திருக்கிறது. அந்த வழக்கு விசாரணை இன்று பிற்பகல் நடக்கும் என்று தெரிகிறது. இது ஒருபக்கம் இருக்க உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகன் படக்குழுவுக்கும், ரசிகர்களுக்கும் பெரிய நிம்மதியை கொடுத்திருக்கிறது. இனிமேல் ரிலீஸுக்கு தடையிருக்காது என கருதப்படுவதால் புதிய ரிலீஸ் தேதி குறித்து பேச்சுக்கள் கிளம்பின.
எப்போது ரிலீஸ்?: இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரிலீஸை தள்ளிப்போட்டால் வியாபாரம் பாதிக்கப்படலாம் என்ற நிலைமையும் இருப்பதால்; ஜனவரி 12 அல்லது ஜனவரி 14ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய கேவிஎன் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும்; விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் எனவும் கூறப்படுகிறது. அதேசமயம் மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதால் கண்டிப்பாக இன்று சான்றிதழ் கிடைக்காது எனவும் குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











