Maamannan Collection - 30 கோடி ரூபாயை தாண்டியது மாமன்னன் வசூல்.. உதயநிதி செம ஹேப்பி
சென்னை: Maamannan Collection (மாமன்னன் வசூல்) மாமன்னன் படம் ரிலீஸாகி ஐந்து நாட்கள் முடிவடைந்திருக்கும் சூழலில் படத்தின் வசூல் 30 கோடி ரூபாயை தாண்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். நடிகராக வலம் வந்த உதயநிதி தற்போது அமைச்சராகிவிட்டதால் இதுதான் அவரது கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் சென்று பார்த்தனர்.

நல்ல ரெஸ்பான்ஸ்: மாரி செல்வராஜின் படங்களில் சமத்துவமும், காத்திரமான அரசியலும் இருக்கும் என்ற முறை இந்தப் படத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது. தனித்தொகுதி எம்.எல்.ஏ சாதி திமிர் உள்ளவர்களால் எப்படி நடத்தப்படுகிறார் என்பதை எந்தவித சமரசமுமின்றி பேசியிருக்கிறார் மாரி செல்வராஜ். குறிப்பாக வடிவேலுவும், ஃபகத் பாசிலும் தங்களது நடிப்பின் மூலம் படத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.
கூஸ்பம்ப்ஸ் இடைவேளை காட்சி: படத்தின் ஒட்டுமொத்த ஆன்மாவுமே இடைவேளை காட்சியில் இருக்கிறது. வடிவேலு அந்த நாற்காலியில் உட்கார்ந்த பிறகு திரையரங்குகளில் அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் துள்ளி குதித்தும், விசிலடித்தும் கொண்டாடி தீர்த்தனர். அந்த அளவுக்கு அந்தக் காட்சியின் வீரியம் இருந்தது. அதேபோல் சபாநாயகராக க்ளைமேக்ஸில் வரும் காட்சியும் கூஸ்பம்ப்ஸாக இருந்தது.
குவியும் பாராட்டு: மாமன்னன் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதிலும் ஆளுங்கட்சி அமைச்சரையே வைத்து இப்படிப்பட்ட அரசியலை பேசியதற்கு மாரி செல்வராஜுக்கு பெரிய பாராட்டு கிடைத்துவருகிறது. இப்படி ஒருபக்கம் படம் விமர்சன ரீதியாக செம ரெஸ்பான்ஸை பெற மறுபக்கம் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது.
எவ்வளவு வசூல்: அதன்படி படம் வெளியான முதல் நாளில் 7 கோடி வசூலித்த மாமன்னன் அடுத்தடுத்த நாட்களில் குறை இல்லாமல் வசூலித்தது. இதன் காரணமாக படம் வெளியாகி நான்கு நாட்கள் முடிவடைந்த சூழலில் 30 கோடி ரூபாயை வசூலில் நெருங்கியிருந்தது. இந்தச் சூழலில் ஐந்தாம் நாள் முடிவில் அந்தப் படம் 30 கோடி ரூபாய் வசூலை தாண்டியிருக்கிறார். எதிர்பார்த்தபடியே நேற்று மாமன்னன் கிட்டத்தட்ட 3லிருந்து நான்கு கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக தெரிகிறது. தனது கடைசி படம் இப்படி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான ரெஸ்பான்ஸ் பெற்றிருப்பதால் உதயநிதியும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
பரிசும், பாராட்டும்: இதற்கிடையே படத்தை தயாரித்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சில நாட்கள் முன்பு மினிகூப்பர் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. அப்போது உதயநிதி மாரி செல்வராஜை வெகுவாக பாராட்டி ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். இதனையடுத்து இயக்குநர் பா.இரஞ்சித்தும் மாமன்னனை வாழ்த்தியிருந்தார். அதில் திமுகவுக்குள் இருக்கும் சாதிய பாகுபாட்டை உதயநிதி இந்தப் படத்தின் மூலம் களைவதற்கான வேலைகளை தொடங்குவார் என்று அவர் தெரிவித்திருந்தார். அதற்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்து நீண்ட பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











