இனிமேல் நடிச்சா ஹீரோதான்! என் டைம் வொர்க் அவுட் ஆகிடுச்சு - வடிவேலு வசனத்தை தனது பாணியில் சொன்ன சூரி
சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது பெரும்பாலானோரின் கவனத்தைப் பெற்ற நடிகர் என்றால் அது சூரி என குறிப்பிடலாம். தீபாவளி திரைப்படத்தில் கூட்டத்தில் ஒருவராக நடித்திருந்த சூரி தனது விடாமுயற்சியால் காமெடியனாக மாறி சிறப்பாக நடித்து வந்ததால் தன்னைச் சுற்றி மிகப் பெரிய வணிகமே நடைபெறும் அளவிற்கு வளர்ந்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானதும் பலருக்கும் ஆச்சரியம் அளித்தது.
வெற்றிமாறன் சூரியை வைத்து என்ன மாதிரியான படம் கொடுக்கப் போகிறார்? வெற்றிமாறன் தனது பாணி படங்களை விட்டுவிட்டு காமெடி ட்ராக்கில் களமிறங்கி விட்டாரா என்ற கேள்விகள் எல்லாம் வெற்றி மாறனை நோக்கி இருந்தாலும் வெற்றி மாறனின் இயக்கத்திற்கு சூரி எப்படி தாக்கு பிடிப்பார் என்ற கேள்வி சூரியைச் சுற்றி இருந்தது. ஆனால் இந்த சந்தேக கேள்விகளுக்கெல்லாம் நெத்தி அடியாய் அமைந்தது விடுதலை பாகம் ஒன்று. விடுதலைப் படத்தில் தனது அசாத்திய நடிப்பால் தனக்கு காமெடி மட்டுமல்ல சீரியஸான கதாபாத்திரங்களிலும் நடிக்க வரும் என சூரி நிருபித்துக் கட்டினார். இதனால் விடுதலை பாகம் ஒன்று வெளியான உடனே ரசிகர்கள் விடுதலை படத்தின் பாகம் 2 எப்போது வரும் என கேட்க ஆரம்பித்து விட்டனர்.

கதையின் நாயகன் சூரி: வெற்றிமாறன் மட்டுமில்லாமல் சூரி இயக்குநர் ராமின் ஏழு கடல் ஏழுமலை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பெரும் பாராட்டை பெற்று வருகிறது. அதேபோல் விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகமும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு சர்வதேச சினிமா ரசிகர்களின் பாராட்டை குவித்து வருகிறது. மேலும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி படத்திலும் கதாநாயகனாக சூரி நடித்துள்ளார். இந்நிலையில் சூரியின் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான படம் கருடன். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி படமாகவே மாறி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் படத்தின் திரைக்கதை என்றாலும் திரை கதையை தனது அசாத்திய நடிப்பால் சூரி ஓவர்டேக் செய்துள்ளார் என்று கூறவேண்டும்.

ரசிகர்களுடன் படம் பார்த்த சூரி: தமிழில் எதார்த்த ஹீரோவாக மாறிவரும் சூரி வரும் காலங்களில் மீண்டும் காமெடியனாக நடிப்பாரா என்பது கேள்விக்குறி தான் என்ற பேச்சுகள் அடிபட்டுக்கொண்டு இருக்கும்போதே, சூரி இனிமேல் காமெடியன் கதாபாத்திரங்களில் நடிக்கமாட்டேன் எனவும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் எனவும் கூறியுள்ளார். நடிகர் சூரி தனது சொந்த ஊரான மதுரையில் உள்ள கோபுரம் சினிமாஸில் ரசிகர்களுடன் இணைந்து கருடன் படத்தை பார்வையிட்டார்.

இனிமேல் ஹீரோவாகத்தான் நடிப்பேன்: அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், " நல்ல படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் நல்ல வரவேற்பைக் கொடுகின்றனர் என்பதை நான் நேரில் முதல் முறையாகப் பார்க்கின்றேன். நான் எப்போதும் நாயகனாகத்தான் இருக்க விரும்புகின்றேன். நகைச்சுவைக் கதாபாத்திரம் வந்தாலும் நடிக்கத் தயாராகவே இருக்கின்றேன். கதாநாயகனாக நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் இனிமேல் இதே பாதையில் போகலாம் என நினைக்கின்றேன்" என கூறியுள்ளார். சூரியின் இந்த பதில் பல இளம் இயக்குநர்களை அவரை நோக்கி படையெடுக்க வைக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











