Thalaivar171: ஜெயிலர் படத்தின் அதிரிபுதிரி வெற்றி.. தலைவர்171 படத்திற்கு எகிரும் எதிர்பார்ப்பு!
சென்னை: நடிகர் ரஜினியின் ஜெயிலர் படம் ரிலீசாகி கடந்த 4 நாட்களில் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 300 கோடிகளை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படம் சர்வதேச அளவில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் எராளமான ரசிகர்களை கவர்ந்து வசூல்மழை பொழிந்து வருகிறது.

படத்தில் சுனில், ஜாக்கி ஷெராப், மோகன்லால், சிவராஜ்குமார் என ஒவ்வொரு மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களை களமிறக்கிய நெல்சன், அவர்களுக்கு படத்தில் சமமான முக்கியத்துவத்தை தந்திருந்தார்.
ரஜினி -லோகேஷ் கூட்டணியில் உருவாகவுள்ள தலைவர்171 படத்தின் எதிர்பார்ப்பு: நடிகர் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்களை சிறப்பாக பயன்படுத்தி தற்போது ஜெயிலர் என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்துள்ளார் நெல்சன் திலீப்குமார். முன்னதாக நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களையே கொடுத்தது. இந்த நிலையில் தற்போது ஜெயிலர் படம் நெல்சனுக்கு சிறப்பான கம்பேக்கை கொடுத்துள்ளது.
கடந்த சில படங்கள் ரஜினிக்கும் சிறப்பாக அமையாத நிலையில், தற்போது ஜெயிலர் படம் அவருக்கும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்நிலையில் ஜெயிலர் படம் சர்வதேச அளவில் சிறப்பான வசூலை குவித்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் என திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் சிறப்பான வரவேற்பை ஜெயிலர் பெற்று வருகிறது. இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான நிலையில், அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலும் ஜெயிலர் படத்தின் வசூல் சிறப்பாக அமைந்துள்ளது. கடந்த 11ம் தேதி சிரஞ்சீவியின் போலா சங்கர் படம் வெளியானது. அந்தப் படம் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ஜெயிலர் படத்தின் வசூலை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நினைத்ததற்கு மாறாக, அந்தப் படம் சரியாக போகவில்லை. இதனால் ஜெயிலரின் வசூலை அந்தப்படம் பாதிக்கவில்லை.
ஜெயிலர் படம் ரஜினிக்கு சிறப்பாக அமைந்துள்ள நிலையில், அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அவரது மூத்த மகள் இயக்கத்தில் உருவாகிவரும் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் தனது தலைவர் 170 படத்தில் இணையவுள்ளார். இதனிடையே, தற்போது இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கிருந்து வந்து சில நாட்களில் தலைவர் 170 படத்தின் சூட்டிங் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தலைவர் 171 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணைய கமிட்டாகியுள்ளார் ரஜினிகாந்த். மிகவும் பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் 15 முதல் 20 முன்னணி நட்சத்திரங்கள் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயிலர் படத்தின் சிறப்பான தரமான சம்பவத்திற்கு பிறகு, லோகேஷ் -ரஜினி கூட்டணியில் உருவாகவுள்ள தலைவர் 171 படத்திற்கு ராக்கெட் வேகத்தில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


Click it and Unblock the Notifications











