கடுப்பேற்றிய கங்குவா.. அமரன் 300 கோடி அடிக்க நல்ல வாய்ப்பு?.. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகம்!
சென்னை: மற்ற மொழி படங்கள் சொல்லி அடிக்கும் கில்லி போல பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் வந்தால் வசூலில் வேட்டையாடி விடுகின்றன. பெருமளவு ரசிகர்களையும் கவர்ந்து விடுகின்றன. பிரபாஸ் குறித்து ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தாலும் இந்த ஆண்டு வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.
அந்த படத்தை தமிழில் இருந்து வெளியாகியுள்ள கங்குவா திரைப்படம் கடக்கும் என சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நிலையில், ரசிகர்களையே சிறுத்தை சிவா கடுப்பேற்றி விட்டார்.

வித்தியாசமாக முயற்சிக்கிறேன் என விவேகம் படத்தை எப்படி வச்சு செய்தாரோ அந்தளவுக்கு கங்குவா படத்தையும் கஷ்டப்படுத்தி விட்டார் சிவா. கங்குவா படத்துக்கு எதிராக குவிந்து வரும் நெகட்டிவ் விமர்சனம் காரணமாக மீண்டும் சிவகார்த்திகேயனின் அமரன் படம் இந்த வாரமும் அடுத்த வாரமும் திரையரங்குகளில் தூள் பறக்கும் வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது என்கின்றனர்.
கடுப்பேற்றிய கங்குவா: இந்த ஆண்டு ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் சியான் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் ரசிகர்களை குழப்பி பெரிய வெற்றியை பெறாமல் போய் விட்டது. இத்தனைக்கும் அந்த படத்தின் கதை மற்றும் கரு எல்லாம் அசத்தலாகவே இருந்தது. சியான் விக்ரம் மட்டுமின்றி ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நல்லாவே பதிந்தது. கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை இப்போது பார்த்தாலும் தரமாக இருக்கும். ஆனால், சூர்யாவின் கங்குவா படம் ரசிகர்களை கடுப்பேற்றி விட்டது.
300 கோடி கிளப்பில் இணையுமா அமரன்?: கங்குவா படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்திருந்தால் அந்த படத்துக்கு மேலும் தியேட்டர்கள் கிடைத்திருக்கும். சிவகார்த்திகேயனின் அமரன் படம் ஓடும் தியேட்டர்களும் கங்குவா படத்துக்கு கிடைத்திருக்கும். ஆனால், தற்போது இருக்கும் சூழ்நிலையில், விமர்சன ரீதியாக அடிவாங்கியுள்ள கங்குவா வசூல் ரீதியாகவும் அடிவாங்கும் என்றே தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாக அமரன் படம் 300 கோடி கிளப்பில் இணையும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். இந்த வாரமும் அடுத்த வாரமும் அமரன் படம் ஓடினால் அசால்ட்டாக 300 கோடி அள்ளிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
கங்குவா வசூல் எப்படி இருக்கும்?: சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் வசூல் அதிகபட்சமாக 200 கோடியை தொடுவதே சிரமம் தான் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன. 300 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், விமர்சனங்களை கடந்து கங்குவா படம் மிகப்பெரிய வெற்றியை பெறுமா? என்பது இந்த வார பாக்ஸ் ஆபிஸை பார்த்தால் தான் தெரியவரும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சூர்யா 44 மாஸ் காட்டுமா?: அண்ணாத்த படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்த்த நிலையில், மீண்டும் ஏமாற்றிவிட்டார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ள கார்த்திக் சுப்புராஜ் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்து வரும் சூர்யா 44 படத்தை பக்கா மாஸ் படமாக கொடுத்து சூர்யா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்திலும் சூர்யா நடிக்கவுள்ள நிலையில், அந்த படம் எப்படி வரும் என்றும் ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











