கருணாநிதியை பார்த்தாச்சு.. அடுத்து எம்ஜிஆர் வராரு.. பொங்கல் வெற்றியை அள்ளுமா வா வாத்தியார்?
சென்னை: விஜய்யின் பிகில் படத்துடன் தைரியமாக மோதிய கார்த்தியின் கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு மாஸ்டர், லியோ என 2 படங்களை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்து கார்த்தியை விட அதிக சம்பளம் வாங்கும் இயக்குநராக மாறும் அளவுக்கு லோகேஷ் கனகராஜ் உச்சத்துக்கு சென்று விட்டார்.
பொங்கல் பண்டிகையை குறிவைத்து கடந்த வாரம் வெளியான பராசக்தி திரைப்படம் பொங்கல் விடுமுறை நாட்களில் கல்லா கட்டுமா என்பதே சந்தேகம் ஆகிவிட்ட சூழலில் அந்த படத்துக்குப் போட்டியாக கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படம் இன்று வெளியாகிறது.

மேலும், ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் நாளை சரியாக பொங்கலுக்கு வெளியாகிறது. ஜன நாயகன் படம் வெளியாகாத நிலையில், இந்த இரு படங்களும் ரிலீஸ் ஆகின்றன. பொங்கலுக்கு வரும் என சொல்லப்பட்ட திரெளபதி 2 படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காத சூழலில் அந்த படத்தின் ரிலீஸ் குடியரசு தின விடுமுறையை நோக்கி நகர்ந்துள்ளது.
பராசக்தி படத்தில் கருணாநிதி: இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு திமுக மிகப்பெரிய பங்காற்றியது என்பதை அடையாளப்படுத்தும் விதமாக பராசக்தி படத்தில் சுதா கொங்கரா அண்ணா மற்றும் கருணாநிதியை காட்சிப்படுத்தியிருந்தார். அண்ணாவாக சேத்தன் நடித்த நிலையில், கருணாநிதி கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடத்திருந்தார். முரசொலி பத்திரிகையில் மாணவர் போராட்டம் குறித்து வரக்கூடாது என ரவி மோகன் வந்து மிரட்டும் காட்சியில், இந்தா பத்து பைசா நாளை வெளியாகும் முரசொலி நாளிதழை வாங்கிப் படி என சொல்லும் வசனம் கைதட்டல்களை அள்ளியது.

வா வாத்தியார் படத்தில் எம்ஜிஆர்: பராசக்தி படத்தில் கருணாநிதியை ரசிகர்கள் பார்த்து கொண்டாடிய நிலையில், அடுத்ததாக வா வாத்தியார் படத்தில் எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி நடித்துள்ளதை பார்த்து இன்று கொண்டாட காத்திருக்கின்றனர். எம்ஜிஆர் உயிரிழந்த நேரத்தில் பிறக்கும் நபராக இந்த படத்தில் கார்த்தி நடித்துள்ளார். சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள வா வாத்தியார் திரைப்படம் இந்த பொங்கலுக்கு எந்தளவுக்கு வசூல் வேட்டையை நடத்துகிறது என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.
நல்லா இருந்தா ஓடும்: வா வாத்தியார் படத்தின் புரொமோஷனில் விஜய்யின் ஜன நாயகன் படம் வராதது வருத்தம் என ஞானவேல் ராஜா, கார்த்தி உள்ளிட்டோர் பேசினர். பராசக்தி தோல்விக்கு விஜய் ரசிகர்கள் தான் காரணம் என அந்த படக்குழு புலம்பி வருகிறது. நல்லா இருந்தா தான் எந்த படமும் ஓடும். எந்தவொரு நடிகரின் ரசிகர்களும் ஒரு படத்தை ஓடவும் வைக்க முடியாது, ஃப்ளாப் ஆக்கவும் முடியாது என்பது தான் நிதர்சனம். கடந்த ஆண்டு பொங்கலுக்கு MGR பெயர் வைத்த மத கஜ ராஜா எதிர்பாரா வெற்றி பெற்றதை போல கார்த்தியின் வா வாத்தியார் வெற்றி பெறுமா?


Click it and Unblock the Notifications











