மகாராஜா படத்துக்குப் பிறகு மீண்டும் குவியும் ஹீரோ வாய்ப்புகள்.. சதுரங்க வேட்டை ஆடும் நட்டி நட்ராஜ்!
சென்னை: நடிகர் விஜய் நடித்த யூத் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான நட்டி என்கிற நடராஜன் சுப்ரமணியம் அடுத்ததாக அனுராக் காஷ்யப் 2003ம் ஆண்டு இந்தியில் இயக்கிய பாஞ்ச் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். அனுராக் காஷ்யப் மற்றும் நட்டி இருவரும் நண்பர்களாக மாறிய நிலையில், தொடர்ந்து பல படங்களில் சேர்ந்து பணியாற்றினர்.
பாலிவுட்டில் பிரபல ஒளிப்பதிவாளராக மாறிய நட்டி ஜாப் வி மெட், ஹல்லா போல், கோல்மால் ரிட்டர்ன்ஸ், லவ் ஆஜ் கல், நாக் அவுட், டெஸி பாய்ஸ் என பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

பல வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் நட்டி தான் கேமராமேனாக வேண்டும் என துப்பாக்கி படத்திற்காக விஜய் அவரை கொண்டு வந்தார். தனுஷ் இந்தியில் நடித்த ராஞ்சனா படத்துக்கும் இவர் தான் ஒளிப்பதிவாளர். சமீபத்தில், விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் நடிப்பில் வெளியான மகாராஜா படத்தில் நட்டி நட்ராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்து ஒட்டுமொத்த பாராட்டுக்களையும் அள்ளிய நிலையில், புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சதுரங்க வேட்டை முதல் மகாராஜா வரை: ஒளிப்பதிவாளராக பல பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்த நட்டி நட்ராஜை இயக்குநர் எச். வினோத் 'சதுரங்க வேட்டை’ படத்தில் பயன்படுத்தியது போல இதுவரை மற்ற யாருமே பயன்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த படத்தில் நட்டி நட்ராஜ் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதன் பின்னர், ஹீரோவாகவும் துணை நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷின் கர்ணன் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய நட்டி நட்ராஜ், விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் மாஸ் காட்டியுள்ளார்.
ஹீரோவாக அடுத்த படம்: ஜெயம் ரவியின் பிரதர் படத்திலும் நட்டி நட்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், விரைவில் அந்த படமும் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. இந்நிலையில், அடுத்ததாக அறிமுக இயக்குநர் ராஜநாதன் இயக்கத்தில் ஹீரோவாக அட்டகாசமான கதையில் நட்டி நட்ராஜ் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. சதுரங்க வேட்டை படத்துக்குப் பிறகு நட்டி நட்ராஜுக்கு இந்த படமும் வெயிட்டான படமாக தமிழ் சினிமாவில் அமையும் என சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











