மெர்சலை விட பிரமாண்டம்... தனுஷுடன் கைகோர்த்த தேனாண்டாள்!
சென்னை: மெர்சல் படத்துக்குப் பிறகு, தனுஷ் நடிக்கும் படத்தைத் தயாரிக்கப் போவதாக தேனாண்டாள் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வெளியான 'மெர்சல்' படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அட்லீ இயக்கிய இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி தீபாவளிக்கு திரைக்கு வந்து, பாஜக தலைவர்கள் கொடுத்த இலவச பப்ளிசிட்டியால் மெகா வெற்றியைப் பெற்றுவிட்டது.
இந்த படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டிவிட்டது. படம் இன்னும் பல அரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கிலும் 'அதிரிந்தி' படம் நன்றாகவே போயுள்ளது.

தனுஷுடன்
இந்நிலையில், மெர்சல் படத்தை தொடர்ந்து, தங்கள் அடுத்த படத்தில் தனுஷ் நடிப்பார் என்று தேனாண்டாள் பிலிம்ஸ் அறிவித்துள்ளது. இதனை அந்நிறுவன உரிமையாளர் ஹேமா ருக்மணி அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பிரமாண்டம்
இந்தப் படத்தை மெர்சலை விட பிரமாண்டமாக எடுக்க தேனாண்டாள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தனுஷ் படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் ஹேமா ருக்மணி கூறியுள்ளார்.

சங்கமித்ரா
சுந்தர் சி இயக்கத்தில் சங்கமித்ரா என்ற படத்தை 200 கோடி ரூபாய்க்கும் மேல் செலவழித்து எடுக்க தேனாண்டாள் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் மெர்சல் படத்தின் பட்ஜெட் எகிறியதால் அந்த படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தனுஷ் படத்துக்குப் பிறகுதான்
இப்போது அடுத்ததாக தனுஷ் படத்தைத் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், சங்கமித்ரா மீண்டும் தள்ளிப் போகிறது. சுந்தர் சியும் கலகலப்பு 2 வை இயக்குவதில் தீவிரமாக உள்ளார்.


Click it and Unblock the Notifications











