Manobala - சரக்கு சாப்பிட்டால் சைட் டிஷ் சாப்பிடுங்க - மனோபாலா இறப்பில் சலசலப்பை ஏற்படுத்திய மன்சூர் அலிகான்
சென்னை: Manobala Death (மனோபாலா மரணம்) இயக்குநரும், நடிகருமான மனோபாலா உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மன்சூர் அலிகான் பேசிய பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இயக்குநர் பாரதிராஜாவிடம் புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குநராக இணைந்தவர் மனோபாலா. கமல் ஹாசன் செய்த பரிந்துரையாலும், மனோபாலாவுக்கு இருந்த திறமையாலும் அவரை உதவி இயக்குநராக இணைத்துக்கொண்டார் பாரதிராஜா. முதல் படத்திலேயே அவரது திறமையை புரிந்துகொண்ட பாரதிராஜா தன்னிடம் நெருங்கி பழகும் உதவி இயக்குநர்களில் ஒருவராக நடத்தினார். இதன் காரணமாக பாரதிராஜாவின் முதன்மை சீடர்களில் ஒருவராகவும் விளங்கினார்.

மனோபாலாவின் இயக்கம்: மனோபாலா 1982ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு நான் உங்கள் ரசிகன், பிள்ளை நிலா, சிறை பறவை, தூரத்து பச்சை, ஊர்க்காவலன் என தமிழில் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இயக்குநராக தனது முத்திரையை பதித்திருக்கிறார்.
நடிகர் மனோபாலா: மனோபாலா கடைசியாக நைனா என்ற படத்தை 2002ஆம் ஆண்டு இயக்கினார். அதனையடுத்து இயக்கத்திற்கான வாய்ப்பு குறைந்ததால் முழு நேர நடிகராக மாறினார் மனோபாலா. அப்படி அவர் நடித்த பிதாமகன், பேரழகன், எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என ஏராளமான படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தன. அவரது இயல்பான நடிப்பும், உடல்மொழியும் ரசிகர்களை ரொம்பவே இம்ப்ரெஸ் செய்தது. அதேசமயம் சில சீரியல்களையும் இயக்கிய அவர், தயாரிப்பாளராகவும் மூன்று படங்களை தயாரித்திருக்கிறார்.

உடல்நலக்குறைவு: இந்தச் சூழலில் மனோபாலாவுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு கல்லீரலில் பிரச்னை வந்ததாகவும் அதற்காக அப்போலோவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த அவருக்கு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை அளிக்கப்பட்டது. விரைவில் உடல்நலம் தேறிவிடுவார் என்ற நம்பிக்கையில் அவரது குடும்பத்தினர் இருந்தனர்.
மனோபாலா உயிரிழப்பு: ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை 10 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறவிருக்கிறது. திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவருடனான நினைவுகளை சோகத்துடன் பகிர்ந்துவருகின்றனர்.

மன்சூர் அலிகான்: அந்தவகையில் நடிகர் மன்சூர் அலிகான் மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், "மனோபாலா மிகப்பெரிய கலைஞர். அவர் இயக்கிய மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் படத்தில் நான் நடித்திருக்கிறேன்.
அவர் சைவமாக இருந்தாலும் எங்களுக்கு வித விதமான உணவுகளை வழங்குவார். சரக்கு திரையுலகில் பலருக்கு எமனாக இருக்கிறது. சரக்கு சாப்பிட்டால் சைட் டிஷ் சாப்பிடுங்கள்" என்றார். அவரது இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், துக்க நிகழ்வுக்கு வந்து இப்படியா பேசுவது என்றும் கண்டனம் எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











