Jailer - சூப்பர் ஸ்டார்னா ரஜினிதான்.. வாரிசின் மொத்த வசூலை ஒரே நாளில் வாரி சுருட்டிய ஜெயிலர்
சென்னை: Jailer Box Office (ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ்) வாரிசு படத்தின் மொத்த வசூலையும் ஜெயிலர் படம் ஒரே நாளில் அள்ளியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ஜெயிலர் படம் நேற்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் 900 ஸ்க்ரீன்களிலும், உலக அளவில் 4000 ஸ்க்ரீன்களிலும் படம் திரையிடப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு பிறகு ரஜினி நடித்த படம் ரிலீஸானதால் திரையரங்குகளில் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினார்கள். இதன் காரணமாக திரையரங்குகளில் கூட்டம் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. பல திரையரங்குகளில் நின்றுகொண்டே படம் பார்த்த சம்பவம் எல்லாம் அரங்கேறியது.

பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்: பீஸ்ட்டில் விட்டதை இதில் நெல்சன் திலீப்குமார் பிடித்துவிட்டார் என்றும்; பல வருடங்களுக்கு பிறகு தலைவர் ரஜினிக்கு தரமான கம்பேக்காக அமைந்திருக்கிறது. நெல்சன் திலீப்குமார் ரஜினிகாந்த்தை அவ்வளவு க்ளாஸாக, மாஸாக காட்சிப்படுத்தியிருக்கிறார் என்றும்; இடைவேளை காட்சி எல்லாம் உச்சக்கட்ட மாஸ் எனவும் ரசிகர்கள் மகிழ்ச்சியோடு கூறிவருகின்றனர். அதுமட்டுமின்றி மோகன் லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோரை படு மாஸாக நெல்சன் திலீப்குமார் காட்டியிருக்கிறார் எனவும் சிலாகிக்கின்றனர்.
மெகா ஹிட்: நெல்சன் திலீப்குமாரின் டார்க் காமெடியும் படு பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. குறிப்பாக ரஜினி யோகிபாபு அலப்பறைகள் ரசிக்கும்படி இருப்பதாகவும் படம் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் படம் மெகா ஹிட்டாகிவிட்டதாக ரஜினி ரசிகர்களும் ஓபனாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
வசூல் மழை: விமர்சன ரீதியாக ஒருபக்கம் வரவேற்பை பெறும் ஜெயிலர் முதல் நாள் வசூலிலும் சாதனை படைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் 49 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 23 கோடி ரூபாயை முதல் நாளில் அள்ளியிருக்கிறது. இதன் மூலம் முதல் நாளில் அதிகம் வசூலித்த படம் என்ற பெயரை ஜெயிலர் பெற்றுள்ளது. இதற்கு முன்னர் துணிவு நம்பர் 1ல் இருந்தது.
வெளிநாட்டு வசூல்: இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் வசூல் மழை பொழிந்துவருகிறது. அமெரிக்காவில் 1.45 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 12 கோடி ரூபாய்) ஜெயிலர் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக பீஸ்ட் படம் 1.37 அமெரிக்க டாலர்களை வசூலித்திருந்தது.
வாரிசின் மொத்த வசூல்: இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அமெரிக்காவில் வாரிசு படம் மொத்தமாகவே 1.14 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது. ஆனால் ஜெயிலர் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே 1.15 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் வாரிசின் மொத்த வசூலை கொஞ்ச நேரத்திலேயே ஜெயிலர் அடித்து நொறுக்கியிருக்கிறது. இதன் மூலமாவது யார் உண்மையான சூப்பர் ஸ்டார் என்பதை பலரும் புரிந்துகொள்ள வேண்டும் என உற்சாகத்துடன்கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











