18 ஆண்டுகளுக்கு பின்.. மீண்டும் குணா குகை வந்த ரியல் மஞ்சும்மல் பாய்ஸ்.. ஷாக் கொடுத்த மாநகரம் நடிகர்
திண்டுக்கல் : மலையாளத்தில் வெளியாகி தமிழ்நாட்டில் வசூல் சாதனை படைத்து வரும் மஞ்சும்மல் பாய்ஸ் படம் உருவாக காரணமாக உள்ள ரியல் மஞ்சும்மல் பாய்ஸ் 18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் குணா குகை வந்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ஒரு வெளி மாநில படம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும். அப்படித்தான் பாகுபலி, பாகுபலி 2, கேஜிஎஃப் வரிசையில் இந்த ஆண்டு மஞ்சும்மல் பாய்ஸ் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரளாவை சேர்ந்த நண்பர்கள் குழு, குணா குகைக்கு சுற்றி பார்க்கின்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஒருவர் குழிக்குள் விழுந்துவிட, இறுதியாக நண்பர் ஒருவரே குழிக்குள் இறங்கி சக நண்பரை காப்பாற்றுவதே கதையாகும். 2006ஆம் ஆண்டு குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் இறுதியில் கமல்ஹாசனின் குணா படத்தில் இடம்பெற்ற "கண்மணி அன்போடு காதலன்" ரசிகர்களிடையே கனெக்டாகிவிட்டது.
சர்வைவல் டிராமாவை இவ்வளவு விறுவிறுப்புடன் தமிழ்நாடு ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் கேரளாவை விடவும் தமிழ்நாட்டில் தான் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் வசூல் அதிகமாகியுள்ளது. ரூ.100 கோடியை கடந்துள்ள இந்த படத்தின் வசூல், வரும் நாட்களில் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெளியாகி ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வரும் சூழலில், ரியல் மஞ்சும்மல் பாய்ஸ் குழுவினர் கொடைக்கானலுக்கு குடும்பத்தினருடன் மீண்டும் சுற்றுலா வந்துள்ளனர். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பின் குணா குகையை மீண்டும் மஞ்சும்மல் பாய்ஸ் குழு பார்த்துள்ளது. இதனையறிந்த சுற்றுலா பயணிகள் பலரும் அவர்களுடன் செல்ஃபி எடுத்து கொண்டனர்.
அதேபோல் மாநகரம் படத்தில் நடித்து புகழ்பெற்ற முனீஷ்காந்த் மஞ்சும்மல் பாய்ஸ் குழுவினரை சந்தித்தார். அதிலும் குழிக்குள் விழுந்த சுபாஷ் சந்திரன் மற்றும் குழிக்குள் இறங்கி அவரை தைரியமாக காப்பாற்றிய சிஜு டேவிட் என்ற குட்டன் ஆகியோருடன் சில மணி நேரங்கள் உரையாடினார். அதன்பின் அவர்கள் அனைவரும் இணைந்து மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்ததாக தெரிய வந்துள்ளது. அதேபோல் மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெளியான பின், குணா குகையை சென்று பார்க்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications