வலிமை, எதற்கும் துணிந்தவன்...நாளை மாறன் ரிலீஸ்...ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்
சென்னை : டாப் ஹீரோக்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகி வருவதால் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். அதுவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் வரிசையாக ரிலீசாவதை சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல படங்களின் ஷுட்டிங், ரிலீஸ் ஆகியன தள்ளி போகின. அதிலும் டாப் ஹீரோக்களின் படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. தியேட்டர்கள் திறக்கப்பட்டு, 50 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 2021 ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

நம்பிக்கை தந்த மாஸ்டர்
மாஸ்டர் படம் கொடுத்த பிரம்மாண்ட வெற்றி காரணமாக தியேட்டர் தொழில்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தனுஷின் கர்ணன், சிவகார்த்திகேயனின் டாக்டர் ஆகியன மட்டுமே பெரிய படங்களாக ரிலீஸ் செய்யப்பட்டன. அதற்குள் மீண்டும் கொரோனா இரண்டாம் அலை உச்சம் அடைந்து, தியேட்டர்கள் மூடப்பட்டன. மீண்டும் திறக்கப்பட்ட பிறகு ரஜினியின் அண்ணாத்த, சிம்புவின் மாநாடு போன்ற படங்கள் ரிலீசாகி வசூலை குவித்தன. இதனையடுத்து வரிசையாக பல படங்கள் ரிலீசுக்கு தயாராகின.

வலிமையின் வசூல் சாதனை
2022 ம் ஆண்டின் துவக்கத்தில் மீண்டும் கொரோனா காரணமாக ரிலீஸ் தேதியை அறிவித்த படங்கள், பிறகு பின் வாங்கின. பிப்ரவரி முதல் வாரத்தில் தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு முதல் படமாக அஜித்தின் வலிமை ரிலீஸ் ஆனது. இந்த படம் ரிலீசான முதல் வாரத்தில் 100 கோடி கிளப்பிலும், இரண்டாவது வாரத்தில் 200 கோடி கிளப்பிலும் இணைந்தது. வலிமை படத்தின் பிரம்மாண்ட வசூலை சாதனையை ரசிகர்கள் கொண்டாடி முடிப்பதற்குள் இன்று சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் ஆனது.

கலக்கும் எதற்கும் துணிந்தவன்
மூன்று ஆண்டுகளாக சூர்யா படங்கள் எதுவும் தியேட்டரில் ரிலீசாகாமல் இருந்ததாலும், வித்தியாசமான கதை என்பதாலும் இந்த படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பை ரசிகர்கள் அளித்துள்ளனர். முதல் நாளே அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்த படம் கவர்ந்துள்ளது. குறிப்பாக குடும்ப ஆடியன்ஸ்களை பெரிய அளவில் இந்த படம் கவர்ந்துள்ளது. இதனால் இந்த படமும் மிகப் பெரிய ஹிட் படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

நாளை வருகிறார் மாறன்
ரசிகர்களை மேலும் கொண்டாட வைக்கும் விதமாக எதற்கும் துணிந்தவன் படம் ரிலீசான அடுத்த நாளே, நாளை தனுஷின் மாறன் படம் ரிலீசாக உள்ளது. தியேட்டரில் இல்லாமல் ஓடிடியில் மாறன் படம் ரிலீசானாலும் ரசிகர்கள் இந்த படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளனர். தனுஷ் வித்தியாசமான ரோலில் நடித்துள்ளதால் இந்த படத்திற்கு அதிக மவுசு கூடி உள்ளது. அடுத்தடுத்து பெரிய ஸ்டார்கள் மற்றும் மெகா பட்ஜெட் படங்கள் ரிலீசாக உள்ளதால் இவைகள் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ட்ரீட்டாக அமையும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











