அந்தப் பொண்ணுதான் A1.. கௌரி கிஷனிடம் அப்படி கேட்டதில் என்ன தவறு?.. ஜேம்ஸ் வசந்தன் இப்படி பேசுறாரே
சென்னை: நடிகை கௌரி கிஷனிடம் கடந்த வாரத்தில் யூடியூபர் ஒருவர் உடல் எடை குறித்து கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திரைத்துறையை சார்ந்த பலரும் கௌரிக்கு ஆதரவாக நின்றார்கள். அதனையடுத்து அந்த யூடியூபர் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது இஷ்டத்துக்கு பேசியிருக்கிறார்.
நடிகை கௌரி கிஷன் நடித்த அதர்ஸ் படத்தின் ப்ரோமோஷனில் அவரது உடல் எடை குறித்து யூடியூபர் ஒருவர் கேட்டுவிட்டார். அதற்கு அந்த இடத்திலேயே தரமான பதிலடியை கொடுத்தார். அதேசமயம் அந்த யூடியூபரோ தான் செய்த தவறை உணராமல் மேலும் மேலும் பேசிக்கொண்டே இருந்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியது. தேசிய ஊடகங்கள்வரை இந்த விஷயத்தை விவாதமாக எடுத்துக்கொண்டன.
குவிந்த ஆதரவுகள்: திரைத்துறையில் நடிகை ராதிகா, இயக்குநர் பா.இரஞ்சித், நடிகர் கவின் உள்ளிட்டோர் எல்லாம் தங்களது ஆதரவை கொடுத்தார்கள். 96 பட இயக்குநர் பிரேம்குமாரோ தனது ஆதரவை தெரிவித்தது மட்டுமில்லாமல்; கௌரி கிஷன் அந்த நபருக்கு பதிலடி கொடுத்துக்கொண்டிருக்கும்போது அருகில் இயக்குநரும், ஹீரோவும் அமைதியாக இருந்தது தவறு என்றும் குட்டு வைத்தார். ராதிகாவோ, நானாக இருந்திருந்தால் அங்கேயே அந்த நபரை அறைந்திருப்பேன் என கொந்தளித்தார்.

யூடியூபர் வருத்தம்: கௌரி கிஷனும் தனது எக்ஸ் பக்கத்தில், தனக்கு அந்த தனிப்பட்ட நபர் எந்த கோபமும் இல்லை என்று பக்குவமாக பேச; தான் செய்ததை உணர்ந்த அந்த யூடியூபர் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். இப்படி நடந்து முடிந்தாலும் இவ்விவகாரத்தை பற்றி பேசிக்கொண்டுதான் ஒருதரப்பினர் இருக்கிறார்கள். குறிப்பாக பெண்கள் என்றாலே இப்படித்தான் கையாளப்படுவார்களா என்ற கேள்வியும், அதை போக்க என்ன செய்யலாம் என்ற விவாதமும் மீண்டும் கிளம்பியிருக்கிறது.
ஜேம்ஸ் வசந்தன் பேட்டி: இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "கோவை விவகாரத்தில் அந்தப் பெண்தான் ஏ1. பகலிலேயே ஆண் போக துணியாத ஒரு இடத்துக்கு இரவில் ஒருவருடன் அந்தப் பெண் போகக்கூடிய துணிச்சல் எங்கிருந்து வந்தது.எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியத்தில்தானே சென்றீர்கள்.அந்தப் பெண்தானே வாய்ப்பு கொடுக்கிறார்.
இவர்கள் எல்லாம் அப்படித்தான்: இங்கே பெண்ணியம் பேசும் பாதி பேர் குற்றவாளிகளாக மாறுவார்கள். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இருப்பவர்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்தவர்கள்தானே. என்னை பொறுத்தவரை கோவை விவகாரத்தில் அந்தப் பெண்ணை திட்ட வேண்டும். அப்போதுதான் மற்ற பெண்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள்" என்றார்.
கௌரி கிஷன் பற்றி: மேலும் கௌரி கிஷன் விவகாரம் பற்றி பேசுகையில், "கௌரி கிஷனிடம் எடையை பற்றி கேட்டதில் என்ன தவறு? இவர்கள் படத்தில் என்ன மாதிரியான உடை வேண்டுமானாலும் அணிவார்கள். ஆனால் நாம் சென்று அணியக்கூடாது என்று சொன்னால் பிடிக்காதுதானே. அவர்களுடைய விருப்பத்துக்குத்தானே செய்வார்கள். அப்படி தன்னுடைய சேனல் பாப்புலாரிட்டிக்காக நான் இப்படித்தான் கேள்வி கேட்பேன் என ஒருவர் சொல்வதை தவறாக பார்க்க முடியாதுதானே. அவர் கேட்டபோது, இந்தக் கேள்விக்கு எனக்கு பதிலளிக்க விருப்பமில்லை என சொல்லியிருக்கலாமே" என்றார்.


Click it and Unblock the Notifications