Jiiva Birthday: கோடிகளில் விளையாடும் ஜீவா.. சினிமாவில் அடுத்த பிளான் இதுவா? பிறந்த நாள் ரவுண்டப்!
சென்னை: நடிகர் ஜீவா, தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக வலம் வரும் நடிகராக உள்ளார். தனது பதின் பருவத்தில் இருந்தே நடித்து வரும் ஜீவா, தனது திரை வாழ்க்கையில் காலத்திற்கும் பாராட்டப்படக்கூடிய, படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, கற்றது தமிழ், ராம், ஈ, கோ, என்றென்றும் புன்னகை, சிவா மனசுல சக்தி, நண்பன், ப்ளாக் என கூறிக்கொண்டே போகலாம். நடிகர் ஜீவா தனது திரை வாழ்க்கையைத் தொடங்கும்போது, கதைக்கு முக்கியத்துவமுடைய படங்களில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். இன்று அவர் தனது 41வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். அவர் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

தமிழ் சினிமா வரலாற்றில் மிகவும் முக்கியமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று என்றால் அது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம்தான். இன்றைக்கு உச்சத்தில் உள்ள பல நடிகர்களை, கலைஞர்களை உருவாக்கிய தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான, ஆர்.பி. சௌத்ரியின், மகன் தான் ஜீவா. 2003ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் நடித்து வருகின்றார் ஜீவா. ஜாலியான கதாபாத்திரமோ, மிகவும் சீரியசான கதாபாத்திரமோ, எது இருந்தாலும், சிறப்பாக நடிக்கக்கூடிய நடிகராக இன்றைக்கு பெயர் பெற்றுள்ளார்.

ஒருமுறை படப்பிடிப்புத் தளத்தில், இவரது சினிமாவின் ஆரம்பகாலத்தில் நடிகர் நாசர் இவரைப் பார்த்து, ' ஏன்டா டேய், அப்பா தயாரிப்பாளர்னா? நடிக்கிறதுக்கு வந்துடுவீங்களாடா" எனக் கேட்டதாகவும், அதன் பின்னர் அவர்தான் தனக்கு நடிப்பு குறித்து சொல்லிக் கொடுத்ததாகவும் பேட்டி ஒன்றில் கூறினார். தன்னை மூத்த நடிகரான நாசர், காட்டமாக பேசிவிட்டார் என்பதற்காக, அவர் மீது கோபப்படாமல், தொடர்ந்து அவரை தனது படங்களில் நடிக்க வைக்கும்படி, தயாரிப்பாளர்களிடம் கெஞ்சிக் கூத்தாடியதாக ஜீவாவே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

படங்கள்: ஜீவா நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன படம் பிளாக். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக மாறிய பிளாக் படத்தினால், தமிழ் சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார் என்றுதான் கூறவேண்டும். வரும் 31ஆம் தேதி இவர், அர்ஜுன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படமான அகத்தியா படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக, படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படத்தின் டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான, யாத்ரா 2 படமும் ரிலீஸ் ஆகி அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுக் கொடுத்தது. இந்தப் படத்தில் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திப்போனார் என பலரும் பாராட்டினர்.

சொத்து மதிப்பு: ஜீவாவைப் பொறுத்தவரையில் அவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட, ரூபாய் 90 கோடிகள் வரை இருக்கும் என கூறப்படுகின்றது. படங்களில் நடிப்பது, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தை நிர்வகிப்பது மட்டும் இல்லாமல், பிரமாண்டமான நட்சத்திர ஹோட்டல் ஒன்றையும் நடத்தி வருகின்றார் ஜீவா. இதனால் இவரது சொத்து மதிப்பு இந்த அளவுக்கு உள்ளது. ஜீவாவைப் பொறுத்த வரையில் தற்போது, கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பது, தரமான படங்களை தேர்வு செய்து தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.

இன்ஸ்டாகிராம்: இவரது 41வது பிறந்த நாளில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஜீவாவை இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரசிகர்கள் பின் தொடருகின்றனர். ஜீவா நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர் என்பதால், பல படங்களில் கேமியோ கதாபாத்திரங்களில் நடித்தும் உள்ளார். வரும் ஆண்டுகளில் அவரது படங்கள் வெற்றி பெற இந்த பிறந்த நாளில் அவருக்கு பிலிமி பீட் சார்பாக வாழ்த்துகள்.



Click it and Unblock the Notifications











