அமீர்கானையே பாக்ஸ் ஆபீஸில் ஓடவிட்ட அறிமுக நடிகர் படம்.. ஏகப்பட்ட வசூல் சாதனைகளை படைத்த சையாரா!
மும்பை: தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான ராஜு ஜெயமோகன் நடித்த பன் பட்டர் ஜாம் திரைப்படம் முதல் 3 நாட்களில் 1 கோடி வசூலை அள்ளவே திணறிக்கொண்டு இருக்கும் நிலையில், பாலிவுட்டில் கடந்த வாரம் வெளியான அறிமுக நடிகரின் படம் அமீர்கான் நடிப்பில் கடைசியாக வெளியான சித்தாரே ஜமீன் பர் படத்தையே ஓடவிட்டு இருப்பது ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாலிவுட் நடிகர்கள் முதல் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு வரை பலரும் இந்த படத்தை தான் பாராட்டித் தள்ளுகின்றனர். முதல் நாளிலேயே 25 கோடி ரூபாய் வசூல் செய்து மிரட்டி விட்டுருக்கிறது Saiyaara திரைப்படம்.

சாவா திரைப்படத்துக்குப் பிறகு பாலிவுட்டில் அமீர்கான் நடித்த படம் கூட பெரிதாக வசூல் செய்யாத நிலையில், சையாரா திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனன்யா பாண்டே சகோதரர் அறிமுகம்: மர்டர் 2, ஆஷிக் 2, மலங் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மோகித் சூரி இயக்கத்தில் அனன்யா பாண்டேவின் சகோதரர் ஆஹான் பாண்டே அறிமுகமாகியுள்ள படம் இந்த சையாரா. அஹான் பாண்டே மற்றும் அனீத் பட்டா இணைந்து நடித்துள்ள ரொமாண்டிக் படமான சையாரா திரைப்படத்தில் ஏகப்பட்ட ஆபாசக் காட்சிகள் இருந்ததாக சென்சாரில் கடுமையான வெட்டுகள் விழுந்தன. படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்களை பார்த்த இளைஞர்கள், கண்டிப்பாக இந்த படத்தை மிஸ் செய்து விடக் கூடாது என தியேட்டர்களில் பார்க்க குவிந்ததன் விளைவு தான் இந்த படம் இந்தளவுக்கு வசூலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதன் காரணம் என்கின்றனர். பாலிவுட்டின் பிரபல வில்லன் நடிகர் சுன்கி பாண்டேவின் மகள் தான் அனன்யா பாண்டே. அவரை தொடர்ந்து இன்னொரு வாரிசு நடிகராக ஆஹான் பாண்டே உருவாகியுள்ளார்.
50 கோடி வசூல்: முதல் நாளில் 25 கோடி வசூல் செய்து பாலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்து விட்டார் ஆஹான் பாண்டே. யாருடா இந்த பையன் வந்த வேகத்திலேயே அமீர்கான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் போன்ற முன்னணி நடிகர்களால் இந்த ஆண்டு முடியாத வசூல் சாதனையை அசால்ட்டாக பண்ணிட்டானே என ஒரே பேச்சாக அடிபட்டு வருகிறது. முதல் 3 நாள் முடிவில் இதுவரை 50 கோடி வசூலை இந்த படம் அள்ளியிருக்கிறது.
அமீர்கான் பட வசூல் சாதனை முறியடிப்பு: கடந்த 2 ஆண்டுகள் எந்தவொரு படமும் வெளியாகாமல் லால் சிங் சத்தா படத்தின் தோல்விக்குப் பிறகு அமைதியான அமீர்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. ஆனால், அந்த படம் முதல் நாளில் அதிகபட்சமாக 10.7 கோடி தான் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னதாக அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ரெய்டு 2 திரைப்படம் முதல் நாளில் 19.25 கோடி வசூல் செய்தது. அக்ஷய் குமாரின் ஏர் ஃபோர்ஸ் திரைப்படம் 12.25 கோடியும், கேசரி சாப்டர் 2 திரைப்படம் 7.75 கோடி வசூலையும் தான் பெற்றன. அனைத்து டாப் ஹீரோக்களின் ஓபனிங் வசூல் சாதனையும் அனன்யா பாண்டே சகோதரர் அடித்து நொறுக்கி விட்டார். கூடிய சீக்கிரமே 100 கோடி வசூல் க்ளப்பில் இந்த படம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











