வெற்றிமாறனின் வாடிவாசல்.. சூர்யாவுக்கு ஜோடியாகப்போகும் நடிகை இவங்களா?
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக விடுதலை 2 படம் வெளியானது. படத்தின் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பைவிடவும் இரண்டாம் பாகத்துக்கு கம்மியான வரவேற்பே கிடைத்தது. இருப்பினும் படத்தின் வசனங்கள் உள்ளிட்ட சில போர்ஷன்கள் நன்றாக இருந்தது என்று ரசிகர்கள் கூறினார்கள். அடுத்ததாக வாடிவாசல் பட வேலைகளை தொடங்கவிருக்கிறார் வெற்றி. இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். குறைந்த எண்ணிக்கையிலான படங்கள் மட்டுமே அவர் செய்திருந்தாலும் ஒவ்வொரு படத்தையும் வெற்றி படமாக கொடுத்தவர். ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளையும் அவர் வாங்கியிருக்கிறார். அவரது படம் என்றாலே கண்டிப்பாக சமூகத்தில் ஒரு விவாதத்தை கிளப்பும் என்ற நிலைதான் இருக்கிறது. அவரது இயக்கத்தில் கடைசியாக விடுதலை 2 படம் வெளியானது.

கலவையான விமர்சனம்: சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கிஷோர், கென் கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. முதல் பாகத்தில் சூரிக்கு கொடுக்கப்பட்டிருந்த ஸ்பேஸ் இரண்டாம் பாகத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் படத்தின் ஸ்க்ரீன் ப்ளேவும் சுமார்தான் என்றும்; பல இடங்களில் படத்தில் பிரசார தொனி அடித்துவிட்டது; தோழர் என்ற வார்த்தை படம் முழுக்க ஓவர் டோஸாகிவிட்டது என்றெல்லாம் ரசிகர்கள் கூறினார்கள்.
வாடிவாசல்: இதற்கிடையே சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் குறுநாவலை படமாக்க திட்டமிட்டார் வெற்றிமாறன். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க; சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் டெஸ்ட் ஷூட் சில வருடங்களுக்கு முன்பு நடந்தது. ஆனால் இடையில் விடுதலை படத்தை இயக்க வெற்றி சென்றுவிட்டதால் வாடிவாசல் மூடியே வைக்கப்பட்டிருந்தது. ஒருகட்டத்தில் படம் ட்ராப்பாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை லண்டனில் படத்தின் சிஜி தொடர்பான பணிகள் நடப்பதாக அறிவித்தார் வெற்றிமாறன்.
விரைவில் ஷூட்டிங்: தயாரிப்பாளர் தாணுவும் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் விடுதலை 2வை முடித்திருக்கும் வெற்றிமாறன் அடுத்ததாக வாடிவாசல் படத்தை முடித்துவிட்டுத்தான் வருவேன் என்று தன்னிடம் வரும் தயாரிப்பாளர்களிடம் கூறிவருவதாக தெரிவித்தார். இதனால் வாடிவாசல் படம் ட்ராப்பாகவில்லை என்பதை ரசிகர்கள் உறுதிப்படுத்திக்கொண்டனர். அநேகமாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீரோயின்: இந்நிலையில் படத்தில் நடிக்கவிருக்கும் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமியிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அதற்கு ஐஸ்வர்யா ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் நடித்து முடிக்கும்வரை வேறு ஒரு படத்தில் நடிக்க கமிட்டாக கூடாது என்று வெற்றிமாறன் தரப்பிலிருந்து கண்டிஷன் போடப்பட்டிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது.


Click it and Unblock the Notifications











