பர்ஸ்ட் சீசன்ல ஹரீஷ்-ரைசா.. இப்போ மஹத் - ஐஸ்வர்யா!
புதிய படமொன்றில் மஹத் ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா நடிக்க இருக்கிறார்.
Recommended Video

சென்னை: பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களான மஹத்தும், ஐஸ்வர்யா தத்தாவும் புதிய படமொன்றில் ஜோடியாக நடிக்க இருக்கின்றனர்.
பிக் பாஸ் சீசன் 2 மூலம் அதிக அளவில் சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் தமிழில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். ஆனால், படங்களில் நாயகியாக நடித்ததைவிட, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகமாக மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரன்னர் அப்பாக வந்த ஐஸ்வர்யா, அடுத்ததாக சிம்பு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

மஹத் ஜோடி:
இந்நிலையில், ஐஸ்வர்யா தனது சக போட்டியாளரான மஹத் ஜோடியாக புதிய படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தினை பிரபு ராம் என்ற அறிமுக இயக்குநர் இயக்குகிறார். இவர் ஹாலிவுட் இயக்குநர் ரேண்டி கெண்ட் என்பவரிடம் உதவி இயக்குநராக பணி புரிந்தவர்.

ரொமாண்டிக் காமெடி:
இப்புதிய படமானது இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாலு போன்ற படங்களின் வரிசையில் ரொமாண்டிக் காமெடிப் படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தில் வடசென்னை இளைஞராக மஹத் நடிக்கிறார். அவருக்கு நேர் எதிரான மாடர்ன் பணக்கார வீட்டுப் பெண்ணாக ஐஸ்வர்யா நடிக்க இருக்கிறார்.

மேஜிக்:
இந்த பட அறிவிப்பு தொடர்பாக மஹத்தின் நண்பரும், பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளருமான ஹரீஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவருக்கு மஹத் நன்றி தெரிவித்துள்ளார். அந்தப் பதிவிற்கு ‘இது ஒரு மேஜிக்' என ஐஸ்வர்யா பதிவிட்டுள்ளார்.

டிசம்பரில் ஷூட்டிங்:
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தினை வருணாலயா புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் முதல் துவங்கவுள்ளது. இதற்கு முன்னர் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களான ஹரீஷும், ரைசாவும் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் சேர்ந்து நடித்தனர்.

நடன நிகழ்ச்சி:
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது, ஐஸ்வர்யா, யாஷிகா மற்றும் மஹத் மூவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்த பிறகும் அவர்களது நட்பு அப்படியே தொடர்கிறது. மஹத்தும், யாஷிகாவும் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











