Aishwarya Rai Bachchan: 51 வயதினை எட்டிய உலக அழகி ஐஸ்வர்யா ராய்.. தலை சுற்றவைக்கும் சொத்து மதிப்பு
மும்பை: உலக அழகிப்போட்டியில் ஐஸ்வர்யா ராய்க்குப் பின்னர் பலரும் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் யாருமே ஐஸ்வர்யா ராய் அடைந்த அளவுக்கு புகழைப் பெறவில்லை. அதுதான் ஐஸ்வர்யா ராயை இந்திய சினிமா துறையில் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தென்னிந்தியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய் 1994ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட பின்னர், இந்தியாவின் அடையாளமாக மாறினார். இன்று அதாவது நவம்பர் 1ஆம் தேதி அவர் தனது 51வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 1973ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தார். பிறந்தது கர்நாடகா என்றாலும் தனது படிப்பினை எல்லாம் மும்பையிலேயே படித்தார் ஐஸ்வர்யார். மும்பையின் புகழ்பெற்ற பள்ளிகளில் ஒன்றான, ஆர்ய வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பினை முடித்தார். அதன் பின்னர், மும்பையிலேயே உள்ள, ஜெய் ஹிந்த் கல்லூரியில் படித்தார்.

தனது 19வது வயதில் உலக அழகிப் பட்டத்தினை வென்று அசத்தினார். இது இவருக்கு இந்தியாவில் மட்டும் இல்லாமல், உலக அளவிலும் புகழைப் பெற்றுக் கொடுத்தது. அதன் பின்னர் சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர் மிகவும் பிசியான நடிகையாக மட்டும் இல்லாமல் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் மாறினார். தனது திரை வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும்போது, பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

புகைச்சல்: இவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற மகள் உள்ளார். கடந்த சில மாதங்களாக ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் விவாகரத்து நடைபெறவுள்ளது என கிசுகிசுக்கள் வந்தவண்ணம் உள்ளது. ஆனால் இருவருமே இதுகுறித்து எதுவுமே வாய் திறக்கவில்லை. மேலும் ஐஸ்வர்யா ராய் தான் எங்கு சென்றாலும் மகளைத் தன்னுடன் அழைத்துச் சென்றுவிடுகின்றார். அபிஷேக் பச்சன் சீன்லயே இல்லை என்பதால் கிசுகிசுக்கள் தீவிரமடைந்துள்ளது.

பிறந்த நாள்: இந்நிலையில் இன்று ஐஸ்வர்யா ராய் தனது 51வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அபிஷேக் பச்சன் இதுவரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு வாழ்த்து தெரிவித்து எதுவும் பதிவிடவில்லை. இதனால் இவர்களுக்கு இடையிலான புகைச்சல் மேலும் அதிகரித்துள்ளது.

சொத்து மதிப்பு: ஐஸ்வர்யா ராயைப் பொறுத்தவரையில் அவரது சொத்துமதிப்பு சுமார் ரூபாய் 850 கோடிகளில் இருந்து ரூபாய் 900 கோடிகள் வரை இருக்கும் என மதிப்பிடப்படுகின்றது. இந்தியாவிலேயே அதிக சொத்துமதிப்புடைய நடிகை என்றால் அது ஐஸ்வர்யா ராய் தான். இவரிடம் மும்பையில் மிகவும் ஆடம்பரமான பங்களா உள்ளது. இது இல்லாமல், பல முன்னணி செய்தி நிறுவனங்கள் தொடங்கி பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிட்டராகவும் இருக்கின்றார். மேலும் இவரிடத்தில் பல முன்னணி சொகுசுக்கார்கள், வைரங்கள், தங்க நகைகள் என ஆபரணங்களும் உள்ளது.


Click it and Unblock the Notifications











