மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் - நந்தினி மந்தாகினியாக ஐஸ்வர்யா ராய்
Recommended Video
சென்னை: மணிரத்னம் இயக்கப்போகும் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, அமிதாப் பச்சன், விக்ரம், கார்த்தி, அனுஷ்கா ஷெட்டி, கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், நயன் தாரா, ஜெயம் ரவி என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்க உள்ளனர் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.
இயக்குநர் மணிரத்னம் செக்க சிவந்த வானம் திரைப்படத்தை தொடர்ந்து, புதிய திரைப்படத்தை இயக்கப் போகிறார், என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் தற்போது முற்றிலும் புதிய தகவல் ஒன்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய, தமிழ் வரலாற்று நாவல் பிரியர்களின் ஆல் டைம் ஃபேவரைட் தமிழ் இலக்கிய நாவலான பொன்னியின் செல்வன் கதையை தழுவி ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் மணிரத்தினம். இந்த நாவலை திரைப்படமாக எடுத்து தானே அதில் நடிக்க வேண்டும் என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திட்டமிட்டதும் உண்டு. ஆனால் அவர் முதலமைச்சராகிவிட்டதால் அந்த திட்டம் கைகூடாமல் போய்விட்டது.
அவர் மறைவிற்கு பின்பு பல இயக்குநர்களும் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கியே தீர வேண்டும் என்று லட்சிய வெறியோடு இருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது இயக்குநர் மணிரத்னம் சேர்ந்துள்ளார். அவர் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். அதனை தொடர்ந்து ஜீன்ஸ் மற்றும், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராய், நீண்ட இடைவெளிக்கு பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தில் நந்தினி மற்றும் மந்தாகினி என இரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
அமிதாப் பச்சன், விக்ரம், கார்த்தி, அனுஷ்கா ஷெட்டி, கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், நயன் தாரா, ஜெயம் ரவி என பல திரை நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்க உள்ளனர் என பல வதந்திகள் பரவி வந்த நிலையில் தற்போது விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் பார்த்திபனும் இப்படத்தில் நடிக்க போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதை அடுத்து ஜெயம் ரவி மற்றும் அமலா பாலும் இப்படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளதை உறுதி செய்துள்ளார்.
ஒரு பேட்டியின் போது இப்படத்தை குறித்து தகவல் கேட்டதற்கு ஐஸ்வர்யா ராய், மணி சாரின் அனுமதி இன்றி இப்படத்தை குறித்து பேசுவது சரியானதாக இருக்காது. அது நியாயமானதும் அல்ல என்று பதிலளித்துவிட்டார்.
பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்க உள்ளது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. மணிரத்னம் படம் என்றாலே ரசிகர்களிடம் ஒரு தனி வரவேற்பு இருக்கும். நிச்சயம் இந்த படத்திற்கும் அந்த எதிர்பார்ப்பு உள்ளது. திரைப்படத்தை குறித்து மேலும் சில தகவல்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications











