டிரெண்டான #ஹிந்தி_தெரியாது_போடா.. டி சர்ட் அணிந்து களத்தில் இறங்கிய பிரபல நடிகை.. வைரலாகும் பிக்!
சென்னை: ஒரே ஒரு டி சர்ட் போட்டோ ஒட்டுமொத்த இந்தியாவையே ஆட்டி படைக்க முடியும் என்பதை சமீபத்திய டிரெண்டிங் நிரூபித்து வருகிறது.
Recommended Video
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் சாந்தனு, கிக்கி விஜய், சிரிஷ் உள்ளிட்டோர் அணிந்திருந்த அந்த டி சர்ட்டில் உள்ள வாசகம் தான் #ஹிந்தி_தெரியாது_போடா என்ற ஹாஷ்டேக் இந்த அளவுக்கு வைரலாக காரணம்.
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் எப்போதுமே குரல் கொடுத்து வரும் நிலையில், இந்த டிரெண்டிங்கை பார்த்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தானும் அந்த டி சர்ட்டை வாங்கி அணிந்து கொண்டு போட்டோ போட்டுள்ளார்.

யங் மேஸ்ட்ரோ
இசை ஞானி இளையராஜாவின் மகனும் யங் மேஸ்ட்ரோவுமான யுவன் சங்கர் ராஜா மெட்ரோ படத்தின் ஹீரோ சிரிஷ் உடன் இணைந்து கொண்டு வெளியிட்ட ஒரு புகைப்படம் செம வைரலானது மட்டுமின்றி சர்ச்சைகளையும் கிளப்பி உள்ளன. தமிழ் பேசும் இந்தியன் என்றும், இந்தி தெரியாது போடா என்றும் அவர்கள் அணிந்திருந்த டி சர்ட்டில் இருந்த வாசகங்கள் தான் இந்த ஏகபோக வைரலுக்கு காரணம்.

மனைவியுடன் சாந்தனு
சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகர் சாந்தனு, இந்த டிரெண்டிங்கிலும் உடனடியாக தன்னை இணைத்துக் கொண்டார். அதே மாதிரியான ஜோடி டி சர்ட்களை வாங்கி அணிந்து கொண்டு கணவனும் மனைவி கிக்கி விஜய்யும் கொடுத்த போஸ் இன்னமும் அந்த டிரெண்டிங்கை வலுப்படுத்தியது.

வேற லெவல் டிரெண்டிங்
#ஹிந்தி_தெரியாது_போடா என்ற ஹாஷ்டேக்கை காலை முதலே உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்தி திணிப்பு தமிழ்நாட்டில் எந்த நாளும் செல்லாது என்றும், அண்ணா, பெரியார் எல்லாம் அதற்கான அஸ்திவாரத்தை இங்கே போட்டுள்ளனர் என்றும், மீம்களாகவும் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

தம்பியுடன் களத்தில் இறங்கிய ஐஸ்வர்யா
இந்நிலையில், தனது தம்பியுடன் இந்தி தெரியாது போடா என்ற டி சர்ட்டை அணிந்து கொண்டு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் தனது வலுவான ஆதரவை இந்த விவகாரத்தில் கொடுத்துள்ளார். அவரது போட்டோ வைரலாகி வரும் நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு ஆதரவு அளித்து பாராட்டி வருகின்றனர்.

அதிகரிக்கும்
இந்தி தெரியாததால் இயக்குநர் வெற்றிமாறன் வட இந்திய விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டதாக சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானையே இந்தி திரையுலகம் புறக்கணித்த விஷயமும் சமீபத்தில் தெரியவந்து விஸ்வரூபம் எடுத்தது. இந்நிலையில், இந்த டி சர்ட் டிரெண்டிங்கிற்கு ஆதரவு கொடுத்து ஏகப்பட்ட நடிகர்கள் நடிகைகள் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெலிட் பண்ணிட்டாரு
ஆதரவுகள் குவிந்த நிலையில், அதே அளவுக்கு சில கடுமையான எதிர்ப்புகளும், ஆபாச கமெண்ட்டுகளும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போட்ட ட்வீட்டுக்கு கீழே குவியத் தொடங்கின. அதனால், திடீரென தான் போட்ட டி சர்ட் போட்டோ ட்வீட்டை டெலிட் செய்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.


Click it and Unblock the Notifications











