Aishwarya Rajesh - காக்கா முட்டைக்கு பிறகுதான் வாய்ப்பே வரல - ஐஸ்வர்யா ராஜேஷ் ஆதங்கம்
சென்னை: Aishwarya Rajesh (ஐஸ்வர்யா ராஜேஷ்) காக்கா முட்டை படத்தை பார்த்து பலர் பாராட்டினார்கள் ஆனால் அதற்கு பிறகு வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார். இளம் நடிகையாக இருந்தாலும் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை பக்குவமான கலைஞராக மாற்றியிருக்கிறார். அவரது நடிப்புக்கு உதாரணமாக காக்கா முட்டை படத்தை சொல்லலாம்.

யாரும் செய்யாதது: அந்தப் படம் வெளியான போதெல்லாம் ஐஸ்வர்யா ராஜேஷ் இண்டஸ்ட்ரிக்குள் நுழைந்த புதிது. அப்படிப்பட்ட சமயத்தில் எந்த ஹீரோயினும் இரண்டு மகன்களுக்கு தாயாக நடிக்க யோசிப்பார். ஆனால் ஐஸ்வர்யா அப்படி இல்லை. அதனை துணிந்து செய்தார். அதன் பிறகு பெரும் ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் பட வாய்ப்புகள் கம்மியாகவே அவருக்கு கிடைத்தன.
வடசென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படங்களில் வடசென்னை படம் முக்கியமானது. அதில் தனது நடிப்பின் மூலம் தனுஷுக்கே டஃப் கொடுத்திருப்பார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் கடைசியாக ஃபர்ஹானா படத்தில் நடித்தார். அந்தப் படம் சர்ச்சைகளை தாண்டி வெளியானாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. சூழல் இப்படி இருக்க அமேசான் ப்ரைம் வீடியோ சார்பில் பொழுதுபோக்கு துறையில் ஆதிக்கம் செலுத்தும் பெண்களுக்கான நிகழ்ச்சி 'மைத்ரி' என்ற பெயரில் சென்னையில் நடைபெற்றது.
ஐஸ்வர்யா ராஜேஷ், மாளவிகா மோகனன், மது போன்ற நடிகர்களும் ரேஷ்மா கட்டாலா, சுவாதி ரகுராமன், யாமினி யக்னமூர்த்தி, அபர்ணா புரோஹித் போன்ற திரைக்குப் பின்னால் உள்ள படைப்பாளிகள் 8 பேர் இந்த அமர்வில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்,
வாய்ப்பே வரவில்லை: நான் காக்கா முட்டை படத்தில் நடித்த பின்பு மொத்த திரையுலகமும் என்னை தொடர்பு கொண்டு பாராட்டியது. நிறைய பேர் புகழ்ந்தார்கள். ஆனால், அதன் பிறகு எனக்கு எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக நான் எந்த படத்திலும் நடிக்காமல் சும்மாவே இருந்தேன்.
இவர்கள் தவிர யாரும் இல்லை: என்னுடைய பட வரிசையை எடுத்துக்கொண்டால், தனுஷ், சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான், விஜய் சேதுபதி போன்றவர்களை தவிர என்னை பாராட்டிய மற்ற பெரிய நடிகர்கள் யாரும் அவர்கள் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இங்கு ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையே இருக்கும் வேறுபாடுதான் பிரச்னை. நீங்கள் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டுமென்றால் உங்களிடம் டிஜிட்டல், ஓடிடி, சாட்டிலைட், மார்கெட் மதிப்பு இருக்க வேண்டும். இன்றைய காலத்தில் இவையெல்லாம் முக்கியமான ஒன்று
முடிவு எடுத்தேன்: அதன் பிறகுதான் நான் பெண் மைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க வேண்டும் என நினைத்தேன். பெண் மைய கதாபாத்திர படங்களில் நடிப்பதால் பெரிய ஹீரோக்கள் யாரும் என்னை அவர்கள் படத்தில் நடிக்க அழைப்பு விடுப்பதில்லை என நினைக்கிறேன். அதைப்பற்றி நான் கவலைப்படுவதுமில்லை. என்னுடைய படத்தில் நான்தான் ஹீரோவாக இருக்க வேண்டும் என முடிவெடுத்து நடிக்கிறேன். அதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கென்று தனியாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











