வீட்டு லாக்கரில் இருந்த தங்க, வைர நகை மாயம்.. போலீசில் புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
சென்னை : வீட்டு லாக்கரில் இருந்த தங்க வைர நகைகள் திருடுபோனதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர் கடந்த ஆண்டு தனுஷை விட்டுப்பிரிந்து தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் இருமகன்களுடன் வசித்து வருகிறார்.

தங்க, வைர நகை மாயம்
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது வீட்டு லாக்கரில் இருந்த சுமார் 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள், நவரத்தின கற்களை காணவில்லை என்றும், இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் என்றும் சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் போலீசார் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், அந்த நகைகள் அனைத்தும் தனது திருமணத்திற்காக வாங்கப்பட்ட நகை என்றும், கடந்த 18 ஆண்டுகளாக பாதுகாத்து வைத்திருந்தேன்.

பல ஆண்டுகளாக திறக்காத லாக்கர்
அந்த நகைகளை கடைசியாக தனது தங்கை செளந்தர்யாவின் திருமணத்தின் போது பயன்படுத்திவிட்டு மீண்டும் லாக்கரில் வைத்ததாகவும், அதன்பின் அந்த லாக்கரை திறக்காமல் வைத்திருந்ததாகவும், மூன்று முறை வீடு மாறிய போது லாக்கரில் இருந்த நகையை திறந்து பார்க்கவில்லை.

வேலைக்காரர்கள் மீது சந்தேகம்
கடந்த பிப்ரவரி 10ந் தேதி லாக்கரை திறந்து பார்த்தபோது தான், அதில் நகை இல்லாதது தெரிந்ததாகவும், லாக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கும் தெரியும் எனவும், அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் ஐஸ்வர்யா புகார் மனுவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லால் சலாம்
த்ரி, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இதில், விஷ்ணு விஷால், விக்ராத் ஆகியோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வந்தது. இதில், பொதுமக்களிடம் பவுன்சர்கள் அடாவடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











