இது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பங்களா... நான் தான் பினாமி... போலீஸாரையே அதிர வைத்த ஈஸ்வரி!
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை திருட்டு போன விவகாரத்தில் அடுத்தடுத்து பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்து வருகின்றன
வீட்டு லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் நகை திருடு போய்விட்டதாக காவல்நிலையத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீஸார் நடத்திய விசாரணையில் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் ஈஸ்வரி தான் நகைகளை திருடினார் என தெரியவந்தது.
இந்நிலையில், தற்போது அதையும் விஞ்சும் வகையில் மேலும் பல அதிர்ச்சியான உண்மைகளை கூறியுள்ளார் ஈஸ்வரி.

நகை திருட்டு
லால் சலாம் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இருதினங்களுக்கு முன்னர் தனது வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகைகள் திருடுபோய் விட்டதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் ஈஸ்வரி, கார் டிரைவர் வெங்கடேசன் இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இருவரும் கைது
இந்த விசாரணையில் ஈஸ்வரியும் வெங்கடேசனும் தான் நகை திருட்டில் ஈடுப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், ஈஸ்வரியிடமிருந்து 100 சவரன் தங்க நகை, 30 கிராம் வைர நகை, 4 கிலோ வெள்ளிப் பொருட்கள், வீட்டு சொத்து ஆவணங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இதனிடையே கைதான வெங்கடேசனிடம் ரூ. 9 லட்சம் ரொக்க பணத்தை கொடுத்துள்ளார் ஈஸ்வரி. இதனையடுத்து வெங்கடேசனிடம் உள்ள 9 லட்சத்தை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஐஸ்வர்யாவின் பினாமி
மேலும், ஈஸ்வரி தனது கணவர் அங்கமுத்து பெயரில் வங்கியில் அடகு வைத்துள்ள 350 கிராம் தங்க நகையை மீட்கும் முயற்சியிலும் தேனாம்பேட்டை போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ஈஸ்வரியின் திட்டத்துக்கு அவரது கணவர் அங்கமுத்து உதவி இருக்கலாம் எனவும் போலீஸார் விசாரித்தனர். ஆனால், ஈஸ்வரி திருடியது, சோழிங்கநல்லூர் பகுதியில் வீடு வாங்கியது என எதுவுமே அங்கமுத்துக்கு தெரியவில்லை என சொல்லப்படுகிறது.

குடும்பத்தினரிடம் நாடகம்
சோழிங்கநல்லூர் பகுதியில் வீடு வாங்கியது குறித்து ஈஸ்வரி தனது வீட்டில் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். அதில் சோழிங்கநல்லூரில் வாங்கிய வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பெயரில் பினாமியாக வாங்கியதாகக் கூறியுள்ளார். மேலும், வெளி உலகத்திற்கு இது நமது வீடு எனவும், உண்மையில் இது ஐஸ்வர்யாவுக்கு சொந்தமானது என்றும் கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் இதுபற்றி யாரிடமும் வெளியில் சொல்லக்கூடாது எனவும் குடும்பத்தினரிடம் கதை கட்டியுள்ளார்.

போலீஸார் அதிர்ச்சி
மேலும், அப்படி சொன்னால் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு பிரச்சினை வரும், என் வேலையும் பறிபோகும் என கூறி அனைவரையும் ஏமாற்றியுள்ளார். ஈஸ்வரியின் இந்த கதையை கேட்டு தேனாம்பேட்டை போலீஸாரே அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது புகாரில் குறிப்பிட்டு இருந்ததை விடவும் அதிகமாக ஈஸ்வரியின் வீட்டில் இருந்து 110 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனால், தற்போது அதுகுறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். நகை, பணம் திருடியது மட்டும் இல்லாமல், அதில் ஒரு பங்களாவே வாங்கியுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











