அப்பாவும் வேணும்.. அம்மாவும் வேணும்.. மகன்களுக்காக தனுஷ் - ஐஸ்வர்யா ஒன்றிணைவார்களா?
சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தாலும் அப்பா மற்றும் அம்மா என இருவரையும் ஒருபோதும் விட்டு விலகாமல் அவர்களது மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா கூடவே இருக்கும் காட்சிகள் ரசிகர்களை நெகிழச் செய்துள்ளன.
அம்மாவை விட்டுப் பிரிந்த அப்பாவுடன் ஏன் பேசணும் என கோபம் கொள்ளாமல் அப்பாவும் வேண்டும் என்றும் அம்மாவும் வேண்டும் என்றும் மகன்கள் இருவரும் பாசத்துக்கு ஏங்கித் தவிப்பதை தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புரிந்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

லால் சலாம் ஆடியோ லான்ச்: நேற்று நடைபெற்ற லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், ஏ.ஆர். ரஹ்மான், லைகா சுபாஸ்கரன், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், செளந்தர்யா ரஜினிகாந்த், கே.எஸ். ரவிகுமார், விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமைய்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆடியோ வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்த் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. மேலும், ஏகப்பட்ட விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.
அப்பா சங்கி கிடையாது: அப்பா ரஜினிகாந்தை சோஷியல் மீடியாவில் தொடர்ந்து சங்கி என்று அழைப்பது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சங்கி கிடையாது. அவர் சங்கியாக இருந்திருந்தால் நிச்சயம் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் எனும் இஸ்லாமியர் வேடத்தை ஏற்று நடித்திருக்க மாட்டார். அவர் அரசியல், மதங்களை கடந்து மனிதத்தை மட்டுமே போற்றுபவர் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேச, கீழே பார்த்துக் கொண்டிருந்த ரஜினிகாந்தின் கண்கள் கலங்கி குளமாகி விட்டன.
அம்மாவுடன் அமர்ந்த மகன்கள்: சங்கி பிரச்சனை, விஜய் பற்றி ரஜினிகாந்த் பேசியது என பல விஷயங்களை தாண்டி லால் சலாம் ஆடியோ லாஞ்சில் ரசிகர்களின் கவனத்தை அதிகம் கவர்ந்தது. அம்மா ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அருகே அமர்ந்திருந்த அந்த இரண்டு மகன்கள் தான். யாத்ரா மற்றும் லிங்கா இருவருமே அம்மா இயக்கத்தில் உருவாகி உள்ள லால் சலாம் படத்தை பார்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர். தனது மகன்களை தான் சரியாக கடந்த 2 ஆண்டுகளாக பார்த்துக் கொள்ளவில்லை என்றும் தன்னை புரிந்துக் கொண்டு தனக்கு மகன்கள் சப்போர்ட் கொடுத்தனர் என்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியிருந்தார்.
கேப்டன் மில்லர் விழாவிலும்: இதே போலத்தான் சமீபத்தில் நடைபெற்ற கேப்டன் மில்லர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியிலும் அப்பா தனுஷ் அருகே யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் அமர்ந்திருந்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
அம்மாவும் வேணும் அப்பாவும் வேணும்: கடந்த 2004ம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துக் கொண்டார் தனுஷ். இருவருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என இரு ஆண் குழந்தைகள் பிறந்து தற்போது நன்றாக வளர்ந்து விட்டனர். கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவை அறிவித்தனர். ஆனால், தொடர்ந்து அவர்களது மகன்கள் இருவருமே அப்பா மற்றும் அம்மாவின் அன்பை வேண்டி வருவதால் குழந்தைகளுக்காக இருவரும் ஒன்றாக சேர வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இருவரும் அதுதொடர்பாக முடிவு எடுப்பார்களா? இல்லை நிரந்தர பிரிவு தானா என்பது அவர்கள் தான் முடிவு செய்வார்கள்.


Click it and Unblock the Notifications











