பிரபல ஹீரோவின் சகோதரர்.. இயக்குனர் அனில் தேவ்கன் மாரடைப்பால் திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்!
மும்பை: பிரபல நடிகர் அஜய் தேவ்கனின் சகோதரரும் இயக்குனருமான அனில் தேவ்கன் மாரடைப்பால் மரணமடைந்திருப்பது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல பாலிவுட் ஹீரோ அஜய் தேவ்கன். இந்தியில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவருடைய சகோதரர், அனில் தேவ்கன்.
இந்திப் பட இயக்குனராக இவர், சில படங்களை இந்தியில் இயக்கி உள்ளார்.

பிளாக் மெயில்
அஜய்தேவ்கன், கஜோல் ஜோடியாக நடித்த 'ராஜூ சச்சா', அஜய் தேவ்கன், பிரியங்கா சோப்ரா நடித்த பிளாக் மெயில், ஆதித்யன் சுமன் நடித்த ஹால் எ தில் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதையடுத்து கடந்த 8 ஆண்டுகளாக அனில் தேவ்கன் எந்த படமும் இயக்கவில்லை. அவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார்.

மறைந்து விட்டார்
இந்நிலையில் அனில் தேவ்கன் உயிரிழந்துவிட்டதாக ட்விட்டரில் அஜய்தேவ்கன் தெரிவித்துள்ளார். என் சகோதரர் அனில் தேவ்கன் மறைந்துவிட்டார். அவருடைய மரணத்தால் எங்கள் தேவ்கன் குடும்பம் உடைந்துவிட்டது. அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுங்கள். கொரோனா காரணமாக பிரார்த்தனை கூட்டம் நடத்த இயலாது என்று தெரிவித்துள்ளார்.

நடிகை கஜோல்
இது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மறைவுக்கு ஏராளமான திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அஜய் தேவ்கனின் மனைவியும் பிரபல நடிகையுமான கஜோல் தற்போது சிங்கப்பூரில் இருக்கிறார். அங்கு கல்லூரியில் படித்து வரும் மகளுக்கு துணையாக தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து மரணங்கள்
அவர் தனது இன்ஸ்டாவில், துர்கா பூஜை புகைப்படத்தை வெளியிட்டு, இந்த வருடம் பூஜை இல்லை. தாய் துர்கா எங்களை கவனித்துக் கொண்டிருப்பார் என்பது தெரியும். இந்த கடினமான நேரத்தில் அவர் ஆசி தேவை என்று குறிப்பிட்டுள்ளார். சினிமா துறையில் தொடர்ந்து மரணங்கள் நிகழ்ந்துவருவதை அடுத்து இந்த வருடம் மோசமான வருடம் என ரசிகர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











