Jeans movie: ஜீன்ஸ் படத்தில் நடிக்கவிருந்த ஹீரோக்கள்.. 3வது லக்கி சான்சை பெற்ற பிரஷாந்த்!
சென்னை: நடிகர் பிரஷாந்த், ஐஸ்வர்யா ராய், லட்சுமி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து 1998ல் வெளியான படம் ஜீன்ஸ்.
இந்தப் படத்தில் பிரஷாந்த் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். இன்றளவும் அவரது கேரக்டர் ரசிகர்களுக்கு விருப்பமான ஒன்றாக உள்ளது.

பிரஷாந்த் கேரியரில் மிகப்பெரிய தாக்கத்தை ஜீன்ஸ் படம் உருவாக்கியது. இந்தப் படத்தின் அனைத்து நடிகர்களுக்கும் இந்தப் படம் சிறப்பாக அமைந்தது.
ஜீன்ஸ் படம்: நடிகர் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய், லட்சுமி, நாசர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 1998ம் ஆண்டில் வெளியானது ஜீன்ஸ் படம். பிரம்மாண்டங்களின் இயக்குநர் என்று பெயரெடுத்துள்ள இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்திலும் அதிகமான பிரம்மாண்டங்களையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி ரசிகர்களை கட்டிப் போட்டார். இந்தப் படத்தில் இரட்டையர்களாக பிரஷாந்த் நடித்திருந்தார்.
பலம் சேர்த்த ஏஆர் ரஹ்மான் இசை: ஏஆர் ரஹ்மானின் இசை இந்தப் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்தது. இந்த காலகட்டத்திலும் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட்டாக இந்தப் படத்தின் பாடல்கள் அமைந்துள்ளன. பின்னணி இசையும் அதிகமாக பேசப்பட்டது. இந்தப் படம் நடிகர் பிரஷாந்தின் கேரியரில் அதிகமாக பேசப்படும் படமாக அமைந்தது. அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. படத்தில் அவரது நடிப்பு ஸ்டைலிஷ்ஷாக அமைந்தது.
விதியை உடைத்த ஷங்கர்: தமிழில் இரட்டையர்கள் கேரக்டர் அதிகமாக உள்ள போதிலும் அவர்களை வித்தியாசப்படுத்தும் வகையில் அட்லீஸ்ட் முகத்தில் மரு, மச்சம் வைப்பது வாடிக்கையாக இருந்த நிலையில் இந்த விதியை உடைத்தார் ஷங்கர். இந்தப் படத்தில் உடை உள்ளிட்ட எதிலும் பிரஷாந்தின் கேரக்டர்களில் வித்தியாசம் இல்லாதபடி பார்த்துக் கொண்டார். இந்தப் படத்தில் தன்னுடைய காதலன் விசுவை கண்டுபிடிக்க ஐஸ்வர்யா ராய் மட்டுமில்லாமல் ரசிகர்களும் தடுமாறத்தான் செய்தனர்.
ஷங்கரின் சாய்ஸ்: இதனிடையே ஷங்கருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத்தந்த இந்தப்படத்தில் நடிக்க முன்னதாக அவர் நடிகர் அப்பாஸைத்தான் அணுகியுள்ளார். ஆனால் அவரால் அந்த நேரத்தில் இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதால் அடுத்ததாக அஜித்தை நடிக்க வைக்கவும் ஷங்கர் திட்டமிட்டிருந்துள்ளார். அவரது கால்ஷீட்டும் கிடைக்காததால்தான் இந்தப் படத்தின் லக்கி சான்ஸ் பிரஷாந்திற்கு அடித்துள்ளது. அவர் உடனடியாக ஒப்புக் கொள்ள அவரை வைத்து இந்த ஹிட் படத்தை கொடுத்துள்ளார் ஷங்கர்.
கதையை மாற்றிய ஷங்கர்: இதேபோல முன்னதாக நாசர் கேரக்டரில் நடிகர் கவுண்டமணியை வைத்து கதையை உருவாக்கியிருந்தார் ஷங்கர். ஆனால் அவரது கால்ஷீட்டும் சொதப்ப, அதன்பின்பு கதையிலும் மாற்றத்தை செய்து நாசரை அந்த கேரக்டரில் இணைத்துள்ளார். ஜீன்ஸ் படம் அந்த காலகட்டத்தில் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. அப்போது இது மிகப்பெரிய தொகையாக இருந்தது. மேலும் வெளிநாட்டு மொழி கேட்டகரியில் ஆஸ்கருக்கும் அனுப்பப்பட்டது. இந்தப் படம் வெளியாகி 25 ஆண்டுகளை கடந்த போதிலும் இன்றும் படத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் விருப்பம் காட்டுவதை பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications











