Ajith: மீண்டும் அஜித் கூட்டணியில் இணையும் H வினோத்... அப்போ கமலின் KH 233 மூவி என்னாச்சு..?
சென்னை: கமலின் KH 233 படத்தின் இயக்குநராக கமிட்டாகியிருந்தார் H வினோத். இந்நிலையில், தற்போது மீண்டும் அஜித்துடன் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் H வினோத்.

அஜித்துடன் மீண்டும் இணையும் H வினோத்
அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜர்பைஜானில் நடக்கும் இரண்டாவது கட்ட படப்பிடிப்புக்காக அஜித் சென்னையில் இருந்து கிளம்பிய வீடியோ வைரலானது. அஜித்துடன் த்ரிஷாவும் ஒரே விமானத்தில் அஜர்பைஜான் சென்றுள்ளார். விடாமுயற்சி இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் 70 நாட்கள் நடைபெறும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அஜித்தின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அஜித் எந்த இயக்குநருடன் இணைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அந்த வரிசையில் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், சிறுத்தை சிவா ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன. இப்போது அதில் இயக்குநர் H வினோத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
முதல் படமான சதுரங்க வேட்டை மூலம் திரும்பிப் பார்க்க வைத்த H வினோத், அடுத்து கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார். இந்தப் படமும் சூப்பர் ஹிட் அடித்தது. அதன் தொடர்ச்சியாக அஜித்துடன் இணைந்த H வினோத், அவரது நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என மூன்று படங்களை இயக்கினார். இதில் கடைசியாக வெளியான துணிவு மெகா ஹிட் ஆனது.
இதனால் மீண்டும் அஜித் - H வினோத் கூட்டணி இணையுமா என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், H வினோத் கமலின் KH 233 படத்தில் கமிட்டானார். மேலும், கார்த்தியுடன் தீரன் அதிகாரம் 2, விஜய் சேதுபதி, தனுஷ் ஆகியோரின் படங்கள் என H வினோத்தின் லைன்அப் நீண்டுகொண்டே செல்கிறது. இந்நிலையில் கமலின் KH 233 ஷூட்டிங் எப்போது தொடங்கும் என H வினோத்துக்கே தெரியவில்லையாம்.
கமல் தற்போது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் மீண்டும் அஜித்துடன் இணையலாம் என H வினோத் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித்தும் H வினோத் உடன் மீண்டும் இணைய முடிவு செய்யவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும், இதுகுறித்து முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











