Ajith: அஜித்தின் ஏகே 63 படத்தில் இணையும் டோலிவுட் பிரபலம்... ஒருவேளை அப்படி ஏதும் இருக்குமோ..?
சென்னை: விடாமுயற்சியை தொடர்ந்து அஜித்தின் 63வது படம் குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. ஆனாலும், இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், அஜித்தின் ஏகே 63 படத்தில் டோலிவுட் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அஜித்துடன் இணையும் டோலிவுட் பிரபலம்
அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது, அனிருத் இசையமைத்து வருகிறார். ஆக்ஷன் த்ரில்லர் மூவியாக உருவாகும் விடாமுயற்சி மே மாதம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் உடனடியாக ஏகே 63 தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அஜித்தின் வெறித்தனமான ரசிகரான ஆதிக், கடைசியாக மார்க் ஆண்டனி படத்தை இயக்கியிருந்தார். விஷால், எஸ்ஜே சூர்யா நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனதுடன் பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடி வசூலித்தது.
இதனால் தான் அஜித்தின் ஏகே 63 பட ஆஃபர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு சென்றுள்ளதாம். இந்நிலையில், அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் ஏகே 63 படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளது. தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், முதல்முறையாக அஜித்துடன் இணைந்துள்ளது. இதனால் இந்தப் படத்துக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் அஜித்தின் ஏகே 63 படத்தில் இன்னொரு டோலிவுட் பிரபலம் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளாராம். விடாமுயற்சி படத்துக்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில், ஏகே 63ல் தேவி ஸ்ரீ பிரசாத் கமிட்டாகியுள்ளார். இதனால் ஏகே 63 தெலுங்கு படமாக உருவாகப் போகிறதா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
அதாவது மைத்ரி மூவி மேக்கர்ஸ், தேவிஸ்ரீ பிரசாத் என டோலிவுட் கூட்டணியுடன் ஏகே 63 படத்தில் இணைந்துள்ளார் அஜித். இதன் காரணமாகவே படமும் தெலுங்கு கலர் டோனில் இருக்குமோ என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சூர்யாவின் கங்குவா, விஷாலின் ரத்னம் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வரும் தேவிஸ்ரீ பிரசாத், இப்போது அஜித்துடனும் இணைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஏகே 63 படத்தின் பூஜை பொங்கல் தினத்தன்று சென்னையில் நடைபெற்றதாக சொல்லப்பட்டது. சிம்பிளாக நடைபெற்ற இதில் ஏகே 63 படக்குழுவினர் மட்டுமே கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதுபற்றி அபிஸியலாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், ஏகே படத்தின் ஷூட்டிங் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











