ஒரு ஆர்வத்துல பண்ணிட்டேன்.. கில்லி போஸ்டரை கிழித்த அஜித் ரசிகர் தலைவணங்கி மன்னிப்பு!
சென்னை: நடிகர் அஜித்தின் பிறந்த நாளான நேற்று தீனா திரைப்படம் ரீ ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் படத்தை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய நிலையில், சென்னை காசி திரையரங்கில் அஜித் ரசிகர்கள், விஜய்யின் கில்லி பட பேனரை கிழித்து அட்ராசிட்டி செய்தனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் பேனரை கழித்த வாலிபர் தலைவணங்கி மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக எந்த படமும் வெளியாகவில்லை என்பதால், ரசிகர்களை தியேட்டருக்கு வரவைக்கும் வகையில், வசூலை அள்ளிய திரைப்படங்கள் ரீ ரிலீஸ் ஆகி வருகின்றன. அந்த வகையில், தளபதி நடித்த கில்லி திரைப்படம் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. விஜய்யின் புது படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்குமோ அதே அளவிற்கு கில்லி ரீ ரிலீசுக்கு கிடைத்துள்ளது.

விஜய்யின் கில்லி: 20 ஆண்டுகளுக்கு பின் வெளியான கில்லி படத்திற்கு கிடைத்து இருக்கும் வரவேற்பை பார்த்து டென்ஷனான அஜித் ரசிகர்கள். அஜித்தின் பிறந்த நாளுக்கு மங்காத்தா, பில்லா படத்தை மீண்டும் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதே மங்காத்தா மே1ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தியேட்டர் கிடைப்பதில் பிரச்சனை இருந்ததால், படம் வெளியாகவில்லை. மாறாக தீனா படம் ரீ ரிலீஸ் ஆனது.
அஜித்தின் தீனா: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2001ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம், தீனா. இப்படத்தில் அஜித் குமாருடன் சேர்ந்து, மலையாள நடிகர் சுரேஷ் கோபி, லைலா ஆகியோர் நடித்து இருந்தனர். இது ஏ.ஆர்.முருகதாஸின் முதல் படம் ஆகும். அஜித்தை தல என அழைப்பதற்கு காரணமான இப்படத்தை ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் வைப் செய்து மகிழ்ந்தனர். சென்னை ஜாஃபர்கான்பேட்டை காசி திரையரங்கில் தீனா ரீ-ரிலீஸ் கொண்டாட்டத்தால், அந்த பகுதியில் சிலமணி நேரம் போக்குவரத்து பாதித்தது. மேலும் போலீசார் அங்கு வந்து ரசிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர். அப்போது, திரையரங்கில் வைக்கப்பட்ட கில்லி பேனரை அஜித் ரசிகர்கள் கிழித்தனர். இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானதை, அடுத்து கில்லி பேனரை கிழித்த அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மன்னிச்சிடுங்க: அதில், நான் காசி தியேட்டரில் தீனா படம் பார்க்க வந்தேன். அப்போது அங்கு கில்லி பேனர் இருந்தது, ஒரு ஆர்வத்தில், கையில் இருந்த பைக் சாவியால் பேனரை கிழித்துவிட்டேன். இதன் மூலமா அண்ணன் விஜய் அவர்களுக்கும் தமிழக வெற்றிக்கழக நண்பர்களிடம் நான் தலைவணங்கி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மேலும், இதுபோன்ற சம்பவத்தில் இனி ஈடுபடமாட்டேன் என்பதை தெரிந்து கொள்கிறேன் என அஜித் ரசிகர் அந்த வீடியோவில் பேசி உள்ளார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றனர்.
வேதனையா இருக்கு: இது மட்டுமில்லாமல் கில்லி திரைப்படம் திரையிடப்பட்ட ரோகினி தியேட்டருக்குள் புகுந்த ரசிகர்கள் திரையரங்கின் கதவைத் திறந்து அஜித் அஜித் என கத்தி கூச்சலிட்டனர். இதனால், அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உருவானது. சினிமா என்பது பொழுதுபோக்கிற்கானது, அதற்கு போய் இன்றைய தலைமுறையினர் இப்படி நடந்து கொள்வதை பார்ப்பதற்கு வேதனையாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











