அதிரிபுதிரி ஹிட் அடித்த அஜித்தின் 25வது படம், ரியல் காதல் மன்னன் அவதாரம்: அமர்க்களம் 23 ஆண்டுகள்
சென்னை: தமிழ்த் திரையுலகின் டாப் ஸ்டாரான அஜித்துக்கு கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் தனி இடமுண்டு.
யாருடைய துணையும் இல்லாமல் அறிமுகமாகி, கோலிவுட்டில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார் அஜித்.
அஜித்தின் ஒவ்வொரு அசைவுகளும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ரசிகைகளின் காதல் மன்னன்
அமராவதி படத்தின் மூலம் கோலிவுட்டில் தடம் பதித்த அஜித்துக்கு, ஆசை, வான்மதி, காதல் கோட்டை, நேசம், ராசி, உல்லாசம் போன்ற படங்கள், சிறப்பான வரவேற்பை கொடுத்தது. அதிலும், அவர் நடித்த 'காதல் மன்னன்' திரைப்படம், அஜித்துக்கு ரியல் காதல் மன்னன் என்ற பட்டத்தையும் பெற்றுகொடுத்தது. அஜித்தின் அழகில் மயங்கிய ரசிகைகள், அவரை வேறலெவலில் கொண்டாடினர்.

அமர்க்களம் கொடுத்த அதிரிபுதிரி ஹிட்
அஜித் பெரும்பாலும் காதல் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த காலம் அது. ராசி, காதல் மன்னன், வாலி போன்ற படங்களில் அவர் வித்தியாசமாக நடித்திருந்தாலும், தரமான ஃபேன் பாய் சம்பவங்கள் அதுவரை அரங்கேறியதில்லை. அதனை ஈடுசெய்ய 1999ல் வெளியானது அமர்க்களம். சரண் இயக்கியிருந்த இந்தப் படம், அஜித்தின் சினிமா கேரியரில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பரத்வாஜ் இசையில் இடம்பெற்ற இந்தப் படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன.

லோக்கல் ரவுடியும் சூப்பர் தாதாவும்
அஜித்துக்கு ஜோடியாக ஷாலினியும், முக்கியமான பாத்திரங்களில் ரகுவரன், நாசர், தாமு, ரமேஷ்கண்ணா, விணுச்சக்கரவர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பரத்வாஜ் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். லோக்கல் ரவுடியான அஜித், எப்போதுமே தனது நண்பர்களுடன் தியேட்டரில் இருப்பார். அங்கு வரும் தாதாவான ரகுவரன், நாசரை பழிவாங்குவதற்காக அஜித்தை பயன்படுத்திக்கொள்வார். இதனால் ஏற்படும் மோதல்கள் தான் அமர்க்களம் படத்தின் கதை.

ஆக்சனில் மிரட்டிய அஜித்
திக்கித் திக்கிப் பேசும் லோக்கல் ரவுடியாக ஆக்சனில் மிரட்டிய அஜித்தின் கேரக்டர், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. எதற்கும் அஞ்சாதவனாக துறுதுறுவென நடிப்பில் அமர்க்களம் செய்திருப்பார் அஜித். இந்தப் படம் வெளியான பிறகு அஜித்தின் மார்க்கெட் இன்னும் உச்சம் சென்றது. அதிலும், அவரைத் தேடிவந்த ஆக்சன் கதைகளின் எண்ணிக்கையை சொல்லிமுடியாது.

ஷாலினியுடன் மலர்ந்த காதல்
'அமர்க்களம்' படத்தின் கதைபடி, ரகுவரன் கூறியதற்காக ஷாலினியை கடத்திச் செல்லும் அஜித், அவரை காதலிப்பதைப் போல நடிப்பார். பின்னர் இருவருக்கும் காதல் வந்து, இறுதியில் சேர்ந்தார்களா இல்லையா? என்பது தான் கதை. ஆனால், இது யதேச்சையாக அஜித்- ஷாலினி இருவரது நிஜ வாழ்விலும் காதல் மலர்ந்து, திருமணத்தில் முடிந்தது.

ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்நிலையில், 'அமர்க்களம்' படம் 23 ஆண்டுகள் நிறைவு செய்ததை, அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அஜித்துக்கு மீண்டும் இதுபோல ஒரு தரமான படம் அமைய வேண்டும் எனவும் அவர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











