அஜித் அப்படிப்பட்டவரா.. அவர் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புகின்றனர் - ரசிகர்கள் கொந்தளிப்பு
சென்னை: அஜித் மீது சிலர் வேண்டுமென்றே அவதூறு பரப்புவதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.
அஜித் கடைசியாக ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்தார். இவர்கள் இருவரும் முதலில் இணைந்த நேர்கொண்ட பார்வையும், வலிமையும் கலவையான விமர்சனங்களை பெற்ற சூழலில் துணிவு படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றது. இதனால் அஜித் உற்சாகத்தில் இருக்கிறார்.

குழப்பமான ஏகே 62
சூழல் இப்படி இருக்க துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அஜித் தனது 62ஆவது படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவரது கதை திருப்தி தராததால் அவர் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து மகிழ் திருமேனி இயக்குவார் என கூறப்படுகிறது. இருப்பினும் அதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

மகிழ் திருமேனியை டார்ச்சர் செய்கிறாரா அஜித்?
இதற்கிடையே வாரிசு படத்துடன் போட்டிப்போட்டு துணிவு படம் வெற்றி பெற்றதால் ஏகே 62 படத்தையும் ஹிட்டாக்கிவிட வேண்டும் என அஜித் தீவிரமாக இருப்பதாகவும்; அதனால் மகிழ் திருமேனியிடம் சில கண்டிஷன்களை அவர் போட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி சில ஆங்கில பட சிடிக்களை கொடுத்து அதேபோல் கதைகளை தயார் செய்யும்படி மகிழ் திருமேனியை அஜித் நெருக்குவதாகவும்; அதனால்தான் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்பட்டது.

திருமணத்தை மீறிய உறவில் அஜித் இருக்கிறாரா?
இந்நிலையில் உமைர் சந்து என்பவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் தகவல் கடும் கண்டனங்களை சம்பாதித்து வருகிறது. அவர் பதிவிட்டிருக்கும் ட்வீட்டில், "அஜித் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அஜித் ரசிகர்கள் கொந்தளிப்பின் உச்சத்துக்கு சென்று உமைர் சந்த்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அஜித் மீது பரப்பப்படும் அவதூறு
அஜித் அப்படி எதுவும் செய்யவில்லை. அஜித் இப்போது ஃபுல் பார்மில் இருக்கிறார். எனவே 62ஆவது படத்தையும் ஹிட்டாக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார். அந்த ஆசையில் தவறு ஏதும் இல்லை. அஜித்தை பிடிக்காத சிலர்; அவர் இயக்குநரை டார்ச்சர் செய்கிறார் என அவதூறு பரப்பினர். இப்போது அவரை தனிப்பட்ட ரீதியாக தாக்க ஆரம்பித்திருக்கின்றனர் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.

சிறந்த காதல் ஜோடி அஜித் - ஷாலினி
மேலும், தமிழ் சினிமாவின் சிறந்த காதல் ஜோடிகளில் அஜித்தும் ஷாலினியும் ஒன்று. சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொள்கிறவர்கள் அஜித் - ஷாலினி போல் இருப்போம் என்றுதான் கூறிவருகின்றனர். நிலைமை அப்படி இருக்க அஜித் எப்படி இப்படிப்பட்ட செயலில் இறங்குவார். இந்தத் தகவலை அஜித்தை பிடிக்காதவர்கள்கூட நம்பமாட்டார்கள் என பலரும் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











