Ajith Kumar - அஜித் இப்படியெல்லாமா செய்வாரு.. ச்ச என்ன மனுஷன்யா - ஏர்போர்ட்டில் நெகிழ்ச்சியான ரசிகர்
சென்னை: Ajith Kumar (அஜித்)நடிகர் அஜித்குமார் ஏர்போர்ட்டில் செய்த செயலை பார்த்து நெகிழ்ச்சியான ரசிகர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதனை பார்த்த ரசிகர்கள் எங்கள் அஜித்துக்கு எவ்வளவு பெரிய மனசு என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
அஜித் கடைசியாக ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்தார். வினோத்தும், அஜித்தும் இணைந்த நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் துணிவு பாஸிட்டிவ் விமர்சனத்தையே பெற்றது. படம் வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 300 கோடி ரூபாய்க்கும் மேல் துணிவு வசூலித்திருப்பதாக தயாரிப்பு தரப்பு அறிவித்திருக்கிறது.

ஏகே 62 நிலை என்ன?: துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தனது 62ஆவது படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அஜித். முதலில் அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் சொன்ன கதை பிடிக்காமல் போக படத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அதனையடுத்து மகிழ் திருமேனி படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இறுதிக்கட்டத்தில் கதை உருவாக்கம்: மகிழ் திருமேனிதான் படத்தை இயக்குகிறார் என்றாலும் அதற்குரிய எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகாமல் இருக்கிறது. அதற்கு காரணம் படத்தின் கதை உருவாக்கத்தில் அவர் தீவிர கவனம் செலுத்துவதாகவும், அதனால்தான் இந்தத் தாமதம் எனவும் கூறப்பட்டது. நிலைமை இப்படி இருக்க தற்போது படத்தின் கதை உருவாக்கம் பணி நிறைவடையவிருக்கிறது என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே ஒன்றாம் தேதி வெளியிடப்பட்டு; படத்தின் ஷூட்டிங் மே இரண்டாவது வாரத்தில் ஆரம்பிக்கும் எனவும் கூறப்படுகிறது.
தந்தையை இழந்த அஜித்; சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு: இதற்கிடையே அஜித்தின் தந்தை கடந்த மாதம் உயிரிழந்தார். அந்த சோகத்திலிருந்து அஜித் விரைவில் மீண்டு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதேசமயம் பைக்கில் உலகத்தை சுற்றும் பயணத்தை முதலில் திட்டமிட்டிருந்த அஜித் ஏகே 62 படத்துக்காக அதனை இப்போது ஒத்திவைத்திருக்கிறார் என தெரிகிறது. சூழல் இப்படி இருக்க அஜித் ஏர்போர்ட்டில் செய்திருக்கும் சம்பவம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
லண்டனில் அஜித்: அதாவது அஜித் அடிக்கடி வெளிநாடு செல்வது அனைவரும் அறிந்தது. அப்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் இணையத்தை திணறடிக்கும். அந்தவகையில் இப்போது அவர் லண்டன் சென்றிருக்கிறார். லண்டனிலிருந்து சென்னை திரும்பும்போது அவர் செய்த செயல் குறித்து ரசிகர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
அஜித் இப்படியெல்லாம் செய்வாரா?: அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "என் மனைவி இன்று கிளாஸ்கோவிலிருந்து சென்னைக்கு எங்களுடைய 10 மாத குழந்தையுடன் பயணம் செய்தார். அப்போது லண்டன் ஹெத்ரோவில் அஜித்குமாரை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. எனது மனைவி ஒரு கேபின் சூட்கேஸ் மற்றும் ஒரு குழந்தைக்கான பையுடன் பயணம் செய்தார். அஜித்தை சந்தித்த பிறகு அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

போஸ் மட்டும் கொடுக்கவில்லை: அஜித் வெறும் போஸ் மட்டும் கொடுக்கவில்லை. எனது மனைவி தனியாக வருவதை புரிந்துகொண்ட அவர், எங்கள் குழந்தையின் பையை அவரே எடுத்தார். அதற்கு என் மனைவி வேண்டாம் என்று சொன்னபோது, "பரவாயில்லை. எனக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அதனால் அந்த உணர்வு எனக்கும் தெரியும்" என சொன்னார். அதுமட்டுமின்றி விமான நிலைய ஊழியர்களிடம் அந்த பையை கொடுத்த அவர், எனது மனைவி இருக்கைக்கு அந்த பை வந்து சேர்ந்ததா என்பதையும் உறுதிப்படுத்தினார்.
தலைவா நீங்க ஏன் தூக்குறீங்க: இதற்கிடையே அஜித் எனது மனைவியின் பையை கொண்டுவந்தபோது அங்கிருந்த மற்றொருவர் "தலைவா நீங்க எதுக்கு, நான் கொண்டு வரேன்" என்று கூறினார், அதற்கு அவர் பரவாயில்லை நானே கொண்டு வருகிறேன் என கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, விமான நிலையத்தின் உள்ளே விமானத்திற்காக பேருந்தில் பயணித்தபோது என் மனைவி மீண்டும் அவரிடம் போதும் சார் இனி நானே எடுத்துக்குறேன் என சொல்லியிருக்கிறார்.
ஆனால் அதையும் மறுத்த அஜித் விமானம்வரை அந்த பையை கொண்டு வந்திருக்கிறார். இதெல்லாம் அவர் செய்யணும்ங்ற எந்த அவசியமும் கிடையாது. ஆனால் உச்ச நட்சத்திரமாக இருந்தும் இப்படி செய்தது அவர் மீதான மரியாதையை அதிகரிக்க செய்தது" என பதிவிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவு இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











